வவுனியாவில் இறுதி முடிவெடுக்க இம்மாதம் கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 16 வருடங்களுக்குப் பின்னர் அது உடைய ஆரம்பித்திருக்கின்ற நிலையில், அதிரடி முடிவெடுப்பதற்காக அதன் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் 12ஆம் திகதி வவுனியாவில் ஒன்றுகூடவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது எனவும், எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். போட்டியிடாது எனவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ். இவ்வாறு தனிவழி போக முடிவு செய்ததையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எஞ்சிய மூன்று கட்சிகளும் (தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட்) தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்திருந்தன.
எனினும், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவெடுப்பதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியாவில் கூடுகின்றது.
கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது என கட்சியின் பொதுச் செயலாளர் கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்திலுள்ள கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாகவும், மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயங்கள் தொடர்பாகவும், அரசமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் மேற்படி கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளன என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
வவுனியாவில் இறுதி முடிவெடுக்க இம்மாதம் கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு
Reviewed by Author
on
November 08, 2017
Rating:

No comments:
Post a Comment