கோல்டன் குளோப் விருது: ஆசியாவில் இருந்து முதல் விருதை பெற்ற இந்திய வம்சாவளி நடிகர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த அஸிஸ் அன்சாரி ஆசியாவில் இருந்து முதல்முறையாக கோல்டன் குளோப் விருதை பெற்ற நடிகர் என்ற சாதனையை உருவாக்கியுள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவெர்லி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது.
இதில் சிறந்த திரைப்படமாக ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸவுரி’ (Three Billboards Outside Ebbing, Missouri) தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட படத்துக்கான பிரிவில் ‘லேடி பேர்ட்’ (Lady Bird) தேர்வானது.
சிறந்த நடிகராக ‘டார்க்கஸ்ட் ஹவ்ர்’ (Darkest Hour) படத்தில் நடித்த கேரி ஓல்மேன் மற்றும் சிறந்த நடிகையாக ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிஸ்ஸவுரி’ படத்தில் நடித்த பிரான்செஸ் மெக்டோர்மன்ட், சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட படப்பிரிவில் சிறந்த நடிகராக ஜேம்ஸ் பிராங்கோ, சிறந்த நடிகையாக சாவோய்ர்ஸே ரோனன், சிறந்த இயக்குநராக குயிலெர்மோடெல் டோரோ ஆகியோர் தேர்வாகினர்.
இந்த விழாவில் ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகைகள் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்படும் ‘செசில் பி. டெ மில்லே விருது’ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் கொடையாளருமான ஓப்ரா வின்பிரே-வுக்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில், சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட தொலைக்காட்சி தொடர் பிரிவில் ‘தி மாஸ்டர் ஆப் நன்’ (The Master Of None) தொடரில் நடித்த அஸிஸ் அன்சாரி என்பவருக்கு சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அஸிஸ் அன்சாரி கடந்த 2016-ம் ஆண்டிலும் இதே நாடகத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அப்போது கைநழுவிப்போன வாய்ப்பு அவருக்கு இப்போது கைகூடியுள்ளது. ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை பெறுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோல்டன் குளோப் விருது: ஆசியாவில் இருந்து முதல் விருதை பெற்ற இந்திய வம்சாவளி நடிகர்
Reviewed by Author
on
January 09, 2018
Rating:
Reviewed by Author
on
January 09, 2018
Rating:


No comments:
Post a Comment