அண்மைய செய்திகள்

recent
-

எம்.ஏ. சுமந்திரனுக்கு வி.உருத்திர குமாரன் பகிரங்க சவால் -


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு பகிரங்க சவால் ஒன்றினை விடுத்துள்ளார்.

பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் தமிழீழக் கோரிக்கையினை தமிழ் மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என எம். ஏ. சுமந்திரனை மையப்படுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன.
இந்த நிலையில் கனடாவில் இடம்பெற்று வருகின்ற தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வில் இவ்விவகாரம் தொடர்பில் பகிரங்க சவால் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்திருந்தார்.

குறித்த அமர்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சுமந்திரன் அவர்களே! தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்த தமிழ் தலைவர்களுக்கோ கிடையாது.
முடிந்தால் நீங்கள் நல்லுறவு கொண்டிருக்கும் இலங்கை அரசுடன் பேசி, 6ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மக்கள் முன்னால் வந்து ஆணை கேளுங்கள்.

நீங்கள் தமிழீழ தனியரசுக்கு எதிரான பக்கம் நில்லுங்கள். நாம் தமிழீழ அரசுக்கு ஆதரவான பக்கம் நிற்கிறோம். மக்கள் தீர்ப்பு வழங்கட்டும்.
அப்போது மக்கள் உங்களுக்கு சார்பான தீர்ப்பு வழங்கினால் அதன் பிறகு தமிழீழ தனியரசு நிலைப்பாட்டைக் கைவிட்டதாகப் பேசுங்கள். அதுவரை சற்று அமைதியாக இருங்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நான் எனது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டவாறு தமிழ் மக்களின் அரசியல் தலைவிதி தமிழ் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் எமது செயற்பாடுகளை நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒரு வலு மையமாகத் திரட்டி அந்த வலு மையத்தின் பலத்தில் தங்கி நின்று உலக நாடுகளுடன் எமது நலன் சார்ந்து உரையாடும் பலத்தை நாம் பெற வேண்டும்.
அரசற்ற ஒரு தேசம் என்ற வகையில் தமிழ் மக்கள் தாமாக அணி திரண்டு அரசுகளை எதிர்கொண்டு செயற்படக் கூடியதொரு வலுவைப் பெறும் வகையில் மக்கள் அணித்திரள வேண்டும்.

இந்தத் தொலைநோக்கை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது செயற்பாடுகளைக் கட்டியமைக்க வேண்டியவர்களாக உள்ளோம். கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? என்று நம் மூத்தோர்கள் காட்டிய வழிமுறையொன்று நம்முன்னே உண்டு. வெண்ணெய்யை உருக்கி நெய்யைப் பெறும்போது முயற்சியின் ஊடாக ஒரு உருமாற்றம் நிகழ்கிறது.
இதேபோல் நாம் எமது முயற்சியின் ஊடாக உலகத்தமிழ் மக்கள் என்ற மக்கள் பலத்தை அனைத்துலகில் அரசியற் பொருளாதார சக்தியாக உருமாற்றம் செய்ய வேண்டும்.
நாம் எடுத்துக் கொண்ட உதாரணத்தில் உருமாற்றம் இலகுவானது. நாம் இப்போது பேசும் அரசியல் உருமாற்றம் கடினமானது. மிகுந்த முயற்சியினை வேண்டி நிற்பது. இருந்த போதும் நாம் அதனை செய்தாக வேண்டும்.
எந்தவொரு மக்கள் கூட்டமும் தனது அரசியற் பெருவிருப்பை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், இப் பெருவிருப்புகளை அடைந்து கொள்வதற்காக செயற்படுவதும் அடிப்படை மனித சுதந்திரத்தின் பாற்பட்டது.

இந்த மனித சுதந்திரத்துக்கு தமிழீழ மக்கள் உரித்துடையவர்கள். ஆனால் இலங்கையின் சிங்கள, பௌத்த இனவாத அரசு தனது அரசியற் சட்டங்கள் ஊடாகவும் இராணுவ ஆக்ரமிப்பின் ஊடாகவும் இந்த அடிப்படை மனித சுதந்திரத்தை ஈழத் தமிழ் மக்களிடம் இருந்து பறித்தெடுத்திருக்கிறது.
இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டம் மக்களின் கருத்துரிமைக்கு எதிரானது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சுதந்திரமும், இறைமையும் உடைய சுதந்திர தமிழீழ அரசுதான் தீர்வாக அமையும் என்று சொல்வதற்கும், செயற்படுவதற்கும் உள்ள உரிமையை 6ஆவது திருத்தச் சட்டம் மறுதலிக்கிறது.
நாம் அதனை எதிர்கிறோம். எமது மக்களின் தீர்மானிக்கும் உரிமையினை இலங்கை அரசோ அல்லது சிங்கள தேசமோ தீர்மானிக்க முடியாது. இதனால் அரசியலமைப்பின் இந்தப் பிரிவை நீக்குமாறு நாம் குரல் கொடுக்கிறோம்.
6ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்கள் எவையும் தமிழீழ தனியரசு குறித்த மக்கள் விருப்பினை வெளிப்படுத்தும் ஒன்றாகக் கொள்ள முடியாது.

இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின், 6ஆவது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும்வரை தமிழீழ தனியரசு அமைக்கும் விருப்பினை மக்கள் கைவிட்டு விட்டார்கள் என்று எவரும் கூறமுடியாது.
இவ்வாறு கூறும் உரித்தோஇ ஆணையோ தற்போதைய தமிழ் தலைவர்கள் எவருக்கும் கிடையாது. 1977ஆம் ஆண்டில் தமிழீழம் குறித்த மக்கள் வாக்கெடுப்பு எனக்கூறி நடத்தப்பட்ட தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையும், போர்க்களத்தில் 50,000 இற்கும் மேற்பட்ட போராளிகள் குருதி சிந்தி வழங்கிய உயிர்க்கொடையும் தமிழீழம் என்ற இலட்சியத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.
அண்மையில் வந்த பத்திரிகை செய்தியொன்றில் பெரும்பான்மை சமூகத்தை திருப்திபடுத்துவதற்காக தனிநாட்டுக் கோரிக்கையினை கைவிட்டு விட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் சுமந்திரனுக்கு ஒரு செய்தியைச் சொல்லி வைக்க விரும்புகிறோம்.
சுமந்திரன் அவர்களே! தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்தத் தமிழ் தலைவர்களுக்கோ கிடையாது.
எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் உரிமைக்காக நாம் முனைப்பாக குரல் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியற்தீர்வும் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுதல் முக்கியமானது.
இது தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டின்பாற்பட்ட அடிப்படையான உரிமையாகும். தமிழீழ மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வும் இனப்படுகொலையிலிருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாக்கக்கூடியவகையில், தமிழ் மக்களுக்கான ஈடு செய்நீதியின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தமிழீழ மக்களுக்கு ஈடுசெய்நீதியின் அடிப்படையிலான அரசியற்தீர்வு அவசியம் என்பதனை வலியுறுத்துகிறது.
தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை தமிழ் மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழீழ தனியரசு உள்ளடங்கலான அரசியற்தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முனைப்பாக முன்னெடுக்கவுள்ளது.
இதற்காக (தமிழர் தலைவிதி தமிழர் கையில் - பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்) எனும் மக்கள் அமைப்பை உருவாக்கியுள்ளோம். இம் மக்கள் அமைப்பின் செயற்பாடுகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் நாம் இம் அமர்வில் விவாதிக்கவுள்ளோம்.

மேலும், இம் அமர்வு தமிழர் தாயகப்பிரதேசத்தில் பெப்ரவரி 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சியின் பாற்பட்ட வெளிவந்த இடைக்கால அறிக்கை குறித்தும் விவாதிக்கவுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதே எமது உரையாடலின் அடிப்படைக் கருப்பொருளாக இருக்கும்.
இவற்றைப் பற்றிப் பேசாது புறக்கணிப்பதனை விட, இவற்றைப் பேசி, விவாதித்து இவற்றைக் கடந்து போகும் வகையிலான ஓர் அரசியற்திட்டத்தை நாம் வகுத்துக் கொள்ளுதல் அவசியமானதாகும்.
எமது அரசியற்தலைவிதியை நாமே தீர்மானிக்கும் ஒரு பொறிமுறையினை நாம் உருவாக்கியே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு நாம் இம் அமர்வில் செயற்படுவோமாக என குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஏ. சுமந்திரனுக்கு வி.உருத்திர குமாரன் பகிரங்க சவால் - Reviewed by Author on January 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.