வடக்கு, கிழக்கில் 3 மாதங்களுக்குள் 8 பிராந்திய அலுவலகங்களை அமைக்க திட்டம் -
12 பிராந்தியப் பணியகங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள காணாமல்போனோர் பணியகம் இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இன்னும் 3 மாதங்களுக்குள் செய்துமுடிக்கும் வகையில் பொறிமுறை வகுத்து வருகின்றது.
“பிராந்திய அலுவலகங்களை அமைக்கும் பணியை மூன்று மாதங்களுக்குள் நிறைவுசெய்வதே எமது இலக்காக இருக்கின்றது.
எனினும், ஆட்சேர்ப்பு, பயிற்சியளிப்பு உள்ளிட்ட விடயங்கள் நிறைவுபெற்று நிர்வாக கட்டமைப்பு முழுமை பெற எப்படியும் 6 மாதங்கள் வரை செல்லும் என்று மேற்படி பணியகத்தின் தலைவரான சாலிய பீரிஸ் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோர் பணியகத்துக்கு கொழும்பில் இன்னும் நிரந்தரக் கட்டடம் வழங்கப்படாத நிலையில், தற்காலிக அலுவலகத்திலேயே அதன் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
தலைமை அலுவலகத்துக்குரிய ஆட்சேர்ப்பு இடம்பெற்றிருந்தாலும் பிராந்திய அலுவலகங்களுக்குரிய நிர்வாகப் பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை.
எனவே, அதற்குரிய பணி எப்போது ஆரம்பமாகும், எந்தக் காலப்பகுதிக்குள் நிறைவுபெறும் எனக் குறித்த ஊடகம் வினவியபோதே மேற்கண்ட தகவலை சாலிய பீரிஸ் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் எதிர்வரும் 2ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். எதிர்வரும் 24ஆம் திகதியே முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
2ஆம் திகதி இடம்பெறவிருந்த திருகோணமலை மாவட்டத்துக்கான பயணம் 13ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டதாலேயே முன்கூட்டியே கிளிநொச்சி செல்கின்றனர் பணியக உறுப்பினர்கள்.
காணாமல்போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதும், சாட்சியங்களைப் பதிவுசெய்வதுமே பயணத்தின் பிரதான நோக்கமாகும்.
காணாமல்போனோருக்கான பணியகத்தினர் கடந்த 12ஆம் திகதி மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முதலாவது கலந்துரையாடலை நடத்தினர்.
இந்தக் கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றனர் என்றும், இது வெற்றிகரமானதாக அமைந்தது என்றும் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்திருந்தார்.
எனினும், பணியகத்தின் மீது உறவினர்கள் சிலர் கடும் அதிருப்தி வெளியிட்டனர். இது தொடர்பில் சாலிய பீரிஸிடம் குறித்த ஊடகம் கேட்டபோது, “மக்கள் மத்தியில் விரக்தி ஏற்படுவது வழமை. நாம் சுயாதீனமாகச் செயற்பட்டு நீதியைப்பெற்றுக்கொடுக்கவே விரும்புகின்றோம்” என்று பதிலளித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே காணாமல்போனோர் பணியகம் அமைக்கப்பட்டது.
கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும், மஹிந்த அணியும் இதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இதனால், கடும் இழுபறிக்கு மத்தியிலேயே சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி சட்டவரைபு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடத்துக்குப் பிறகே பணியகத்துக்கான தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களைக் கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.
கடந்த காலத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விவரங்களை அறிந்துகொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதும் இக்குழுவின் நோக்கமாகும்.
காணாமல்போனவர்கள் சம்பந்தமாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்குப் பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமல்போனோர் மற்றும் அவர்களது உறவினர்களின் உரிமைகள் மற்றும் பற்றுதல்களைப் பாதுகாத்துக்கொள்ளல், அறிவுறுத்தல், அரச நிறுவனங்கள் மற்றும் வேறு நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிப்பதற்கு முடியாமற்போன நபர்களின் விவரங்கள் அடங்கிய தரவுகளைத் திரட்டி மத்திய தரவு வலையமைப்பொன்றை ஏற்படுத்தி கோவைப்படுத்தல் போன்ற பணிகளை இக்குழு முன்னெடுக்கவுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் பணியகம் அமைப்பதற்காகவும் அதன் செயற்பாடுகளுக்காகவும் 1.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
மஹிந்த ஆட்சிக்காலத்திலும் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.
மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டாட்சியிலும் அந்தக் குழு செயற்பட்டு தமது இறுதி அறிக்கையைக் கையளித்தமை தெரிந்ததே.
வடக்கு, கிழக்கில் 3 மாதங்களுக்குள் 8 பிராந்திய அலுவலகங்களை அமைக்க திட்டம் -
Reviewed by Author
on
May 31, 2018
Rating:

No comments:
Post a Comment