மலேசியாவில் 30000 வெளிநாட்டு தொழிலாளர்கள் சிறையில் அடைப்பு -
மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறி அங்கு வேலை செய்து வந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கடந்த எட்டு மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய குடிவரவுத்துறை இதனை தெரிவித்துள்ளது. இவர்களை பணிக்கு அமர்த்திய மற்றும் மலேசியாவினுள் கடத்தி வர முயன்றதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் நாடுகடத்தப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
“சட்டவிரோத குடியேறிகள் தானாக முன்வந்து சரணடைவதற்கான வாய்ப்பினை கொடுத்திருந்தோம். அந்த வாய்ப்பு ஆகஸ்ட் 30ம் திகதியுடன் நிறைவடைந்தது” என அந்நாட்டின் குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபா அலி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 30ம் திகதி கால எல்லை முடிந்ததை தொடர்ந்து, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கைது செய்வதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மலேசிய அரசு மேற்கொண்டு வருகின்றது.
கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர்.
இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான, கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இலாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள், வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றிப் பணியில் வைத்துள்ளனர்.
அந்தக் குறைந்த ஊதியத்தைக் கூட அளிக்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்கள் நிகழ்வதும் இச்சிக்கலின் அங்கமாக பார்க்கலாம்.
மலேசியாவில் 30000 வெளிநாட்டு தொழிலாளர்கள் சிறையில் அடைப்பு -
Reviewed by Author
on
September 08, 2018
Rating:

No comments:
Post a Comment