4வது டெஸ்டிலும் இந்தியா தோல்வி : தொடரை வென்று அசத்திய இங்கிலாந்து
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ஓட்டங்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் 27 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
245 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.
புஜாராவை 5 ஓட்டங்களிலும், ஷிகர் தவானை 17 ஓட்டங்களிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோஹ்லி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் வழக்கம் போல கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சற்றே பிரகாசமாக தெரிந்தது.
ஆனால் தேனீர் இடைவேளைக்கு இரண்டு ஓவர்கள் முன் மோயின் அலி வீசிய பந்தை கோஹ்லி தடுப்பாட்டம் ஆட முயற்சிக்க பந்து துடுப்பில் பட்டு ஸ்லிப்பில் இருந்த குக் வசம் சென்றது.
இதனால், 58 ஓட்டங்களுக்கு விராட் கோஹ்லி ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பாண்டியா வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில் சிறிது நேரம் அதிரடி காட்டிய ரிஷப் பந்த் 12 பந்துகளில் 18 ஓட்டங்கள் அடித்த நிலையில் மொயின் அலியின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய இஷாந்த் ஷர்மா(0), ஷமி(8), அஷ்வின்(24) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 69.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அதிகபட்சமாக கோஹ்லி 58 ஓட்டங்கள், ரகானே 51 ஓட்டங்கள் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெடுக்களையும், ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன் மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
4வது டெஸ்டிலும் இந்தியா தோல்வி : தொடரை வென்று அசத்திய இங்கிலாந்து
Reviewed by Author
on
September 03, 2018
Rating:
Reviewed by Author
on
September 03, 2018
Rating:


No comments:
Post a Comment