கலாபூசணம் கா.தவபாலன் எழுதிய 'குரலற்ற மனிதர்கள்' நாவலின் வெளியீட்டு விழா...
ஈழத்துப் படைப்பிலக்கிய பயணத்தில் நாவல்களின் பங்கு பாரிய ஒன்றுதான். யாழ்ப்பாணத்தின் குரும்பசிட்டி என்பது கலை, இலக்கியத்தின் முக்கிய தளம். ஓய்வுநிலை வரி மதிப்பீட்டாளர் கலாபூசணம் கா.தவபாலன் எழுதிய 'குரலற்ற மனிதர்கள்' நாவலின் வெளியீட்டு விழாவானது ஈழத்தின் குரும்பசிட்டி கலைஞானி கலாசார மண்டபத்தில் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமானது.
வளர்மதி சனசமூக நிலையத் தலைவர் சிவரூபன் சர்வேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் பங்கேற்றார். சிறப்பு அதிதிகளாக யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் அவர்களும், யாழ்.உயர் தொழினுட்ப நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயநாதன் அவர்களும் பங்கேற்றனர். யோ.புரட்சி நிகழ்வினை நெறியாள்கை செய்தார்.
முன்னதாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. இறைவணக்கத்தினை நூலாசிரியர் கா.தவபாலன் வழங்கினார். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை வளர்மதி சனசமூக உறுப்பினர்கள் இசைத்தனர். வரவேற்பு நடனத்தினை ஆசிரியை மயூரி நெறியாள்கையில் மாணவி கஜனிகா வழங்கினார். வரவேற்புரையினை குரும்பசிட்டி சனசமூக நிலையத் தலைவர் அருண் சக்திவேல் வழங்கினார். நாவலின் அறிமுக உரையினை கவிஞர் குரும்பையூர் த.ஐங்கரன் ஆற்றினார். தலைமையுரையினை அடுத்து குரும்பசிட்டி கிராமத்தின் மூன்று சமூகப் பெரியார்களான அமரர்கள் ஈழகேசரி பொன்னையா, பொன் பரமானந்தர், ஆ.சி.நடராசா ஆகியோரின் உருவப்படங்கள் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டன.
'ஜீவநதி' வெளியீடான இந்நூலினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை
கிருபா லேணர்ஸ் உரிமையாளர் தொழிலதிபர் 'சமூக திலகம்'அ.கிருபாகரன் பெற்றுக்கொண்டார். யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர் வைத்தியகலாநிதி வே.சாரங்கன் தொடர்ந்து பிரதியினைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் நூற்பிரதிகள் வழங்கப்பட்டன.
நாவலின் நயப்புரையினை 'சாகித்தியரத்னா' தெணியான் நிகழ்த்தினார். தொடர்ந்து நூலாசிரியருக்கான கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. குறிப்பாக வளர்மதி சனசமூக நிலையத்தினரால் 'செந்தமிழ்ச் செல்வன்' எனும் பட்டமும் நூலாசிரியருக்கு வழங்கப்பட்டது. பிரதம விருந்தினர் உரையினைத் தொடர்ந்து, கருத்துரைகளை யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' ச.லலீசன் ஆகியோர் வழங்கினர். ஏற்புரையினை நூலாசிரியர் வழங்கினார்.

கலாபூசணம் கா.தவபாலன் எழுதிய 'குரலற்ற மனிதர்கள்' நாவலின் வெளியீட்டு விழா...
Reviewed by Author
on
September 10, 2018
Rating:

No comments:
Post a Comment