அண்மைய செய்திகள்

recent
-

ஜாதகத்தில் குரு பார்த்தால் நீங்கள் ராஜ வாழ்க்கை வாழ்வீர்கள்: சில தகவல்கள் -


குரு பகவான், நவக்கிரகங்களில் முதன்மையான சுபகிரகம் ஆவார். மனிதனின் வாழ்வில் பல்வேறு உன்னதமான உணர்வுகளை உண்டாக்கக்கூடிய ஆற்றல், குரு பகவானுக்கு உண்டு.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே, வாழ்க்கை சுபீட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தன காரகனாகவும், புத்தி காரகனாகவும் விளங்கும் குரு பகவான், மங்கள காரகனாகவும், புத்திர காரகனாகவும் இருக்கிறார். இறை வழிபாட்டிற்கும், ஞானத்திற்கும் குரு பகவானே காரகனாகிறார்.

ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனநிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறை வழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, மத குருமார்கள், கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்ட சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங்கள், பாராட்டுகள், விருதுகள், சாந்தமான சுபாவம், கண்கள், வாக்கு பலிதம், ஆண்டியாதல், ரிஷி உபதேசம் பெறுதல் ஆகிய அனைத்திற்கும் காரகனாக இருப்பவர் குரு.

ஜனன ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமானால், ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சி களால் பாதிப்பு, பெரியோர்களின் சாபம், கோவில் பிரச்சினையில் ஈடுபடுவது, வறுமை போன்றவற்றால் உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.
தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை குரு பகவான் பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது. ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பது ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும்.
குரு உச்சம் பெற்று கடக ராசியில் சஞ்சரிக்கும் போது, 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கிறது. சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது மாசி மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

குரு திசை ஒருவருக்கு நடைபெற்றால், ராஜாவின் திசை நடப்பதாக கூறுவார்கள். வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால், அவர் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்வார். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வு ஏற்படும். இறுதி காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உண்டாகும்.

பலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களின் மீது குரு பார்வை இருந்தால், அவற்றின் தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். குரு தனித்து இருப்பது நல்லதல்ல. ‘குரு நின்ற இடம் பாழ்’ என்பார்கள். அதுவே குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறுகிறது.
கெஜகேசரி யோகம், ஹம்ச யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், கோடீஸ்வர யோகம், சண்டாள யோகம், சகடை யோகம் ஆகியவை, குரு பகவானால் உண்டாகக்கூடிய யோகங்கள் ஆகும்.

குரு, கோட்சார ரீதியாக 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில், பொருளாதார மேன்மை, சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, தொழிலில் மேன்மை, புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் கோட்சார குரு வரும் போது, குரு பலம் என கூறுகிறோம். ஆனால் குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்வதால், ஒருவருக்கு 5 முறை தான் குரு பலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
2-ல் குரு வரும் போது, குடும்பத்திற்கு நலம் பயக்கும். தன வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குழந்தை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை நிகழ்த்தி உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
5-ல் குரு வரும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் கல்வி வாய்ப்பு கைகூடும். குல தெய்வ, இஷ்ட தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும். கவுரவ பதவிகள் தேடி வரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.

7-ல் குரு வரும் போது, திருமணம் நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கைகூடும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
9-ல் குரு வரும் போது தந்தை, மூத்தவர்களுக்கு நலம் சேரும். பித்ருக்களின் ஆசி கிடைக்கும். வெளி மாநில, வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்பு கிடைக்கும். தந்தைக்கு யோகம், தந்தை வழி முன்னோர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். புனித தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் கிடைக்கும்.
11-ல் குரு வரும் போது, தொழிலில் லாபம் அதிகரிக்கும். திடீர் தன லாபம், பாலிசி முதிர்வு, சொத்துக்கள் கிடைக்கும்.

மேலும் குருவுக்கு 1, 5, 9 பார்வை பலம் உண்டு. ஜனன ஜாதக அடிப்படையில் குரு ஜாதகருக்கு மாரகராகவோ, பாதகராகவோ, அஷ்டமாதிபதியாகவோ இருந்தால் கூட கோச்சாரத்தில் 2, 5, 7, 9, 11-ம் பாவத்துடன் சம்பந்தம் பெறும் போதும், 5, 7, 9 பார்வையால் பார்க்கும் பாவத்தையும், அந்த பாவத்தில் உள்ள கிரகத்தின் மூலமும் சுப பலனே கிடைக்கச் செய்வார்.

கோச்சாரத்தில் குரு, சூரியனை பார்க்கும் போது ஆன்மபலம், ஆத்ம சுத்தி கிடைக்கும். அரசு உத்தியோகம், கவுரவ பதவிகள், அரச பதவிகளும் கிடைக்கச் செய்வார்.
சந்திரனை பார்க்கும் போது, தாய், தாய் வழி உறவினர்களின் அன்பு, ஆதரவு கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு மாமியாருடன் நல்லிணக்கம் ஏற்படும். பெண்களுக்கு கருப்பை தொடர்பான நோய் தீரும்.
செவ்வாயை பார்க்கும் போது, நிலம், புதிய வீடு, வாகன யோகம் உண்டு. உடன் பிறந்தவர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்து விற்பனையாகும். ரத்தம் தொடர்பான நோய் நீங்கும். மத்திய அரசு வேலை, மத்திய அரசின் சன்மானம் கிடைக்கும்.
புதனை பார்க்கும் போது, வெளியில் சொல்ல முடியாத.. மறைமுகமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். சுமாராக படிக்கும் பிள்ளைகள் கூட நல்ல பெயரெடுக்கும் பிள்ளையாக மாறும்.
குருவை பார்க்கும் போது, பணப்புழக்கம் அதிகரிக்கும். வராக்கடன் வசூலாகும். சமுதாய அங்கீகாரம் கிடைக்கும். ஆச்சார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பீர்கள்.

சுக்ரனை குரு பார்த்தால் நகை வாங்கலாம். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்பீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
சனியை பார்த்தால், தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.
ராகுவை பார்த்தால் அதிர்ஷ்டம் தொடர்பான பண வரவு கிடைக்கும்.
கேதுவை பார்த்தால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நாத்திகர்கள் கூட ஆன்மிக நாட்டம் ஏற்பட்டு பிரபஞ்ச சக்தியை உணர்வார்கள்.
இப்படி மனித வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் குரு பலத்தினால் தான் நடத்தி தரப்படுகிறது என்பதால், ஒருவரது ஜாதகத்தில் குருவின் பங்கு அளப்பரியது.

ஜனன ஜாதகத்தாலும், கோச்சாரத்தாலும், குரு பலம் குறைவாலும் அதிக சிரமத்தைச் சந்திப்பவர்கள், அதற்கு பரிகாரமாக சிவனை வணங்கி, ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது. வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஜாதகத்தில் குரு பார்த்தால் நீங்கள் ராஜ வாழ்க்கை வாழ்வீர்கள்: சில தகவல்கள் - Reviewed by Author on December 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.