அண்மைய செய்திகள்

recent
-

தேசிய இனத்தின் தன்னாட்சி தத்துவத்தின் கீழ் வடமாகாண சபை செயற்பட வேண்டும் -


தேசிய இனத்தின் தன்னாட்சி தத்துவத்தின் கீழ் மாகாண சபை செயற்பட வேண்டுமென்பதற்காக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் அவையம் உருவாக்கப்பட்டுள்ளதென்றும், இந்த அவையம் தனிப்பட்ட கட்சி சார்ந்ததில்லை என்றும் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் அவையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அவையம் எந்த கட்சி சார்ந்ததும் அல்ல. கட்சி உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றார்கள். தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி. உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்டவர்கள் இந்த அமைப்பில் இருக்கின்றார்கள்.

இது தனி அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. வடமாகாண சபையை முதன் முதலாக ஆரம்பித்த போது, பல கஸ்டங்களையும் நஸ்டங்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது.
ஒரு தளமற்றதாக வடமாகாண சபை காணப்பட்டது. ஆனால், எதிர்வரும் மாகாண சபைக்கு ஒரு ஸ்திரமான தளத்தை ஏற்படுத்தி வைப்பதன் மூலம் அடுத்த தேர்தலில் வரக் கூடிய மாகாண சபை திறம்பட செயற்பட வழிவகுக்கும் செயற்பாடாகவும் இருக்கின்றது.

மக்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் உரிய இடங்களுக்கு கருத்துக்களை சொல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதற்கும் ஒரு முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஏனையோரின் கருத்துக்களை உள்வாங்கி ஒரு சமூக கட்டமைப்பாக உருவாக்க வேண்டுமென்பதே எமது நோக்கம்.
இந்த விடயங்களை அந்தந்த மாவட்ட உறுப்பினர்களுக்கும், அரசாங்க அதிபர்களுக்கும் தெரிவிப்பதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.

அவையத்திற்கு என ஒரு நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. எந்தக் கட்சி மாகாண சபைக்கு ஆட்சிக்கு வந்தாலும் அதிகாரப் பகிர்வு என்ற நிலைப்பாட்டில் மாறுபட்ட கருத்திற்கு இடமில்லை. எமது அதிகாரப் பகிர்வுக்கு முரண்பட்ட கோட்பாடாக எடுத்துக்கொண்டு வருகின்றோம்.
மாகாண சபை அரசியலமைப்பில் இருக்கும் நிதி சார்ந்த விடயத்தில் மத்திய நிதி ஆணைக்குழு மாகாணங்களுக்கு நிதியை ஒதுக்கிவிட்டு, தீர்மானங்களை எடுக்கும் உரிமை மாகாணங்களுக்கு இருக்க வேண்டும் என்பது எமது அடிப்படைக் கொள்கை.

அந்தவகையில், தற்போது எடுக்கப்பட்ட இந்த தீர்மானங்களை இனிவரும் மாகாண சபையினரும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. பல தீர்மானங்கள் சபை முடிந்ததன் பின்னரும் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது பற்றியும் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கின்றது.
சபை எடுக்கும் முடிவுகளை அதிகாரிகளும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. தேர்தலுக்குப் பிறகு வருகின்றவர்கள் தன்னாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மாகாண சபையை நிர்வகிக்க கூடிய சூழலை ஏற்படுத்தும் எண்ணமும் இந்த அவையத்திற்கு உண்டு.
தனிக்கட்சி அரசியல் எதுவுமில்லை. தேசிய இனத்தின் தன்னாட்சி தத்துவத்தின் அடிப்படையில் முன்நகர்வது என்பதே எமது எண்ணமாக இருக்கின்றது.
ஜனநாயக சமூக கட்டமைப்பு என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கின்றோம். மாகாண சபையின் தேர்தல் இரண்டு மாதங்களில் வந்திருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
ஆளுநர் சபையோ அதிகாரிகள் நிர்வாகமோ ஜனநாயக சபைக்கு மாற்றீடு அல்ல. தேர்தல் ஊடாக ஒரு சபை உருவாக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. இடைவெளிகளைத் தான் நிரப்ப முயற்சிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
தேசிய இனத்தின் தன்னாட்சி தத்துவத்தின் கீழ் வடமாகாண சபை செயற்பட வேண்டும் - Reviewed by Author on January 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.