மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை! தண்டனை வேண்டும்: சம்பந்தன்
படையினரின் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் இன்னமும் இருக்கின்றார்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கும் நீதி வேண்டும், சர்வதேச பொறிமுறை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்குக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போரின்போது இடம்பெற்ற சம்பவங்களை மறப்போம் மன்னிப்போம் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து அந்தக் கட்சியின் தலைவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் நடைபெற்றமை, பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டு நடத்தப்பட்ட உள்நாட்டு விசாரணைகளின்போது உறுதியாகியுள்ளது.
இலங்கைக்கு வந்து சென்ற சர்வதேசத் தலைவர்கள், முக்கிய அதிகாரிகளிடமும் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மை நிலையைத் தெரிவித்துள்ளார்கள்.
இந்தநிலையிலேயே போர்க்குற்றங்களை இரு தரப்பும் புரிந்தனர் என்று சொல்லிவிட்டு எவரும் தப்பி விடமுடியாது. அதாவது இராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் புரிந்தனர் என்று ஒரு சொல்லைச் சொல்லி விட்டுத் தப்பி விடமுடியாது.
படையினர் விதி மீறினர்
ஒரு நாட்டில் போர் நடைபெறுகின்றது என்றால் முதலில் போர் விதிகளைப் பின்பற்றவேண்டும். இரண்டாவதாக அந்த நாட்டு மக்களைப் பாதுகாத்து போர் புரியவேண்டும்.
இந்த இரண்டு விதிமுறைகளையும் உதறி எறிந்துவிட்டு இலங்கை அரச படைகள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றங்களிலும் இறுதிப் போரில் ஈடுபட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்தனர். ஆயிரக்கணக்கான மக்களை காணாமல் ஆக்கினார்கள்.
இந்தநிலையில், இந்தப் போர்க்குற்றங்களுக்கான உண்மைகளை ஏற்று அதனை மறப்போம் மன்னிப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நீதி வேண்டும்
அரச படைகள் குறித்த போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதமரின் கருத்தை வரவேற்கின்றோம். ஆனால், அவரின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம்.
மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். படையினரின் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் இன்னமும் இருக்கின்றார்கள்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கொன்றொழிக்கப்பட் மக்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கும் நீதி வேண்டும். சர்வதேச பொறிமுறை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.
ஆதாரங்கள் உண்டு
இதைவிடுத்து இரு தரப்பும் போர்க்குற்றங்கள் புரிந்தார்கள், மறப்போம் மன்னிப்போம் என்று கூறி அரசு தப்பிக்க முடியாது. இதற்கு நாமும் இடமளிக்கமாட்டோம். சர்வதேச சமூகமும் அனுமதிக்காது.
இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதும் மட்டும் அல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் படையினர் போர்க்குற்றங்களைப் புரிந்தார்கள். சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட போராளிகள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்தார்கள், துன்புறுத்தினார்கள்.
பலரைக் காணாமல் ஆக்கினார்கள். பலரைச் சாகடித்தார்கள். இதற்குரிய ஆதாரங்களும் வெளியாகியிருக்கின்றன.
எனவே. இலங்கை அரசு ஐ.நா. தீர்மானங்களை மதித்து அதனை நடைமுறைப்படுத்தி உரிய வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை! தண்டனை வேண்டும்: சம்பந்தன்
Reviewed by Author
on
February 21, 2019
Rating:
Reviewed by Author
on
February 21, 2019
Rating:


No comments:
Post a Comment