தமிழகத்தில் ஒருவரை காப்பாற்ற சென்ற 6 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன? -
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நெமிலி செல்வபெருமாள் நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி(53). இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு விட்டிருந்தார். அப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படாததால், அங்குள்ள குடியிருப்புகளில் செப்டிக் டேங்க் வசதி மூலம் கழிவு நீர் அகற்றப்படும்.
இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் உள்ள செப்டிக் டாங்கை சுத்தம் செய்யும் பணியில், தனது மகன்களான கண்ணன்(27), கார்த்தி(26) ஆகியோருடன் ஈடுபட்டிருந்தார்.
டேங்கை சுத்தம் செய்த பின்னர் அதனுள்ளே மீதியுள்ள பகுதியை சுத்தம் செய்ய கிருஷ்ணமூர்த்தி இறங்கினார். அப்போது விஷவாயு அவரை தாக்கவே, டேங்க் உள்ளேயே அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அவரது மகன்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், கார்த்தி உள்ளே இறங்கினார். ஆனால், அவரும் விஷவாயு தாக்கி உள்ளே மயங்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து, உள்ளே இறங்கிய கண்ணனும் மயக்கியதால், அவர்களது குடும்பத்தினர் அலறினர்.
இந்த சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகளான சுரதாபாய்(28) மற்றும் பரமசிவம் இருவரும் அடுத்தடுத்து உள்ளே குதித்தனர். ஆனால் அவர்களும் விஷவாயு தாக்குதலுக்கு ஆளாகினர்.
அவர்களது உறவினர்கள் கூச்சலிட்டதைக் கேட்டு, அவ்வழியாக சென்ற லட்சுமி காந்தன் என்ற இளைஞர் 5 பேர் உள்ளே மயங்கி விழுந்ததைக் கேட்டு சற்றும் யோசிக்காமல் அவர்களை காப்பாற்ற உள்ளே குதித்துள்ளார். அவரும் அதில் மயக்கமானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதுகாப்பு உபகரணங்களுடன் உள்ளே இறங்கிய தீயணைப்பு வீரர்கள், 6 பேரையும் மேலே தூக்கி வந்தனர். அவர்களை சோதித்தபோது அனைவரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
பின்னர் உடனடியாக அவர்களது உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஷவாயு உள்ள செப்டிக் டேங்கை தீயணைப்புத் துறையினர் கெமிக்கல் நுரை கொண்டு சுத்தம் செய்து சீல் வைத்தனர்.
தமிழகத்தில் ஒருவரை காப்பாற்ற சென்ற 6 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன? -
Reviewed by Author
on
March 27, 2019
Rating:

No comments:
Post a Comment