நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல-எமது மதமும்,எமது மத குருக்களும் வன்முறையைத் தூண்டுபவர்களும் அல்ல- மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் அறிக்கை.
நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல-எமது மதமும்,எமது மத குருக்களும் வன்முறையைத் தூண்டுபவர்களும் அல்ல-மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் அறிக்கை.
கடந்த சில வாரங்களாக மன்னார் மண்ணிலே கத்தோலிக்க மதத்தைப் பற்றியும் ஆயர்,குருக்களைப் பற்றியும் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற வேதனையான பதிவுகளையிட்டு கவலையடைகின்றோம்.என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
-இவ்விடையம் தொடர்பாக இன்று (29) அவ் ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க குருக்கள்,துறவிகளின் சமூகப்பணி அளப்பெரியது .யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இன, மத பேதமின்றி மக்களின் நலனிற்காக பல முன்னெடுப்புக்களை மன்னார் மறைமாவட்ட ஆயரும் அவரோடு இணைந்த குருக்களும் உள்நாட்டிலும் ,சர்வதேசத்திலும் மேற்கொண்டது மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை.
உணவுப் பொருட்கள்,மருத்துவ வசதிகள் இல்லாமல் மக்கள் அந்தரித்த வேளைனயில் இவற்றை மிகுந்த சிரமத்தின் மத்தியில் மக்களுக்கு விநியோகித்தது மட்டு மல்லாமல்,ஆலயங்களில் மக்களை பாதுகாத்ததும், ஆலய எல்லைகளில் மக்களின் பாதுகாப்புக் குடியிருப்புக்களை அமைத்தும் மக்களின் நலனில் அக்கறை கொண்டும் பணியாற்றினார்கள்.
அத்தோடு அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும் மனித மாண்பு மதிக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் அவர்கள் ஆற்றிய பணி சொல்லில் அடங்காதது.
அத்துடன் மக்கள் பொது இடங்களிலும் வீதிகளிலும் கொல்லப்பட்ட போது அவர்களின் சடலங்கள் அனாதரவாக விடப்பட்ட போதும் அவர்களை உரிய இடங்களிற்கு கொண்டு சேர்த்ததிலும் அவர்களின் நல்லடக்கங்களில் ஈடுபட்டதிலும் மன்னார் மறைமாவட்ட ஆயரும் குருக்களும் பட்ட கஸ்டங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.
இவ்வாறான சமூகப் பணிகளில் ஈடுபட்டதற்காக ஆயர்கள்,குருக்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் ஆயுததாரிகளால் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதும் அனைத்திற்கும் மேலாகதங்களது உயிர்களை கொடுத்த கத்தோலிக்க குருக்களின் வரலாறும் எம் மன்னார் மண்ணிற்கு உண்டு.
இவ்வுண்மையை தமிழ் பேசும் எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
மன்னார் மாவட்டத்தில் குருக்கள் ஆன்மீகப் பணிகளில் மாத்திரமல்லாமல் திருச்சபையின் கோட்பாடுகளுக்கு உட்பட்ட மக்களின் நலன் சார்ந்த சமூகப் பணிகளிலும் ஈடுபடுவது வரலாற்று உண்மையாகவும் கத்தோலிக்க மக்களின் தேவைப்பாடாகவும் காணப்படுகின்றது.
பிற,மத சகோதரர்கள் கத்தோலிக்க குருக்களை தங்கள் தேவைகளின் போது அந்தந்த தேவைகளின் வழங்குனர்களாக அல்லது ஓர் தீர்வை முன்வைப்பவராக ஒரு மதத்தின் தலைவராக பார்க்கின்றனர்.
ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவராகிய நாங்கள் குருக்களை இறை அபிசேகம் செய்யப்பட்டவர்களாக கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் ஏந்தும் பாக்கியம் பெற்றவர்களாக திருப்பலியின் போதும் கிறிஸ்துவை பிரதிபலிப்பவர்களாகப் பார்க்கின்றோம்.
இது எமது கத்தோலிக்க விசுவாசமாகும்.
இலங்கை கத்தோலிக்கர்களின் யாத்திரை ஸ்தலமாகவும் மன்னார் கத்தோலிக்கர்களின் ஆன்மீக இளைப்பாற்றியின் மையமாகவும் காணப்படும் மடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாக உள்ள மாந்தை லூர்து அன்னை ஆலயத்திற்கு அருகில் இடம் பெற்ற ஓர் நிகழ்வு இவ் ஆலயத்தின் நுழைவாயிலின் அருகில் அப்பகுதி மக்களின் கலந்துரையாடலுடன் புரிந்துணர்வின் அடிப்படையில் விழாவிற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலங்கார வளைவினை சிவராத்திரியைக் காரணம் காட்டி அதே இடத்தில் நிரந்தர அலங்கார வளைவை அமைக்கும் நோக்குடன் ஏற்கனவே இருந்ததை தாங்களே அகற்றி அதற்குப் பதிலாக நிரந்தர அலங்கார வளைவை நிறுவ ஆரம்பித்ததும், இதனால் அங்கிருந்த மக்களிடையே முரண்பாடு ஏற்பட்டதும் நிரந்தரமாக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு அகற்றப்பட்டதும் நாம் அறிந்ததே.
இம் முறுகல் நிலையை அறிந்து நிலமையைச் சீர்படுத்த எமது கத்தோலிக்க குருக்கள் சென்ற போது அங்கு ஏற்கனவே திட்ட மிட்டு கூடியிருந்த சிலர் ஒரு பக்கச்சார்பாக செயற்பட்டதுடன் எமது கத்தோலிக்க குரு ஒருவரை மையப்படுத்தி திட்டமிட்டு புகைப்படங்கள் எடுத்தும் பின்னர் அவ்விடத்தை ஒருவன் முறையின் இடமாக சித்தரித்து ஊடகங்களிலும், முகநூல்களிலும் மன்னார் மறைமாவட்டக் குருக்களையும் கத்தோலிக்க சமூகத்தையும் ஒருவன் முறையாளர்களாக சித்தரித்து அவமானப்படுத்தியமை மாத்திரமல்லாமல் எமது கத்தோலிக்க குருக்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்துக் கொண்டிருப்பதுடன் எமது மதகுரு மீது வன்முறைக் குற்றம் சுமத்தி அவரை ஒரு குற்றவாளியாகக் காட்டியிருக்கிறார்கள்.
நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. எமது மதமும், எமது மதகுருக்களும் வன்முறையைத் தூண்டுபவர்களும் அல்ல.ஆனால் உண்மைக்காக எமது குரல் எப்போதும் ஒலிக்கின்றது என்பதை இந்தவேளையில் நினைவூட்டி நிற்கின்றோம்.
இந் நிகழ்வுகளை ஒருபக்கச் சார்பாகவும் நீதிக்கும்,உண்மைக்கும் புறம்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களையும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களையும் கத்தோலிக்க குருக்களையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தவர்களையும், அவமானப்படுத்தியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும் சமூகப் பணிகளில் ஈடுபடும் எமது குருக்களை வன்முறையாளர்களாக சித்தரித்தவர்களையும் முறைப்பாடிட்டவர்களையும் மிகமிக வன்மையாகவும் கண்டிக்கின்றோம்.
அன்பான கத்தோலிக்க இறைமக்களே பொய்யான செய்திகளையும் புகைப்படங்களையும் ஒரு மதத்தின் சார்பாக சமூகவலைத்தளங்களிலும், முகநூல் புத்தகங்களிலும்,ஊடகங்களிலும் திட்டமிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
நிகழ்வு நடந்த மாந்தைச் சந்தியில் காணப்பட்ட புனித லூர்து அன்னை ஆலயம் எந்த புகைப்படத்திலும் அவர்களால் காட்டப்பட வில்லை.
இதிலிருந்து அவர்களின் கபடத்தன்மையும் நீதிக்குப் புறம்பான செயலும் புலப்படுகிறது.
திட்டமிட்டு கத்தோலிக்க குருக்களையும் கத்தோலிக்க மக்களையும் வன் முறையாளர்களாகக் காட்டி நம்மீது மிகுந்த அனாகரிகமான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
அவர்களின் கபடத்தனத்தால் நாம் பிளவு படவும் செய்துள்ளார்கள். உண்மையைச் சரியாக விளங்கிக் கொண்டு இது மறைசாட்சிகள் இரத்தம் சிந்திய மண். இங்கு நமது மறைக்காய் எழும் சூழ்ச்சியை செபத்தினாலும் எமது கத்தோலிக்க விசுவாசத்தின் நம்பிக்கையின் கோட்பாட்டாலும் வெல்ல ஒன்றித்து நிற்க அழைக்கின்றோம்.என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல-எமது மதமும்,எமது மத குருக்களும் வன்முறையைத் தூண்டுபவர்களும் அல்ல- மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் அறிக்கை.
Reviewed by Author
on
March 29, 2019
Rating:

No comments:
Post a Comment