மகிந்தவுடன் பேச கொழும்பு வருமாறு கூட்டமைப்பினருக்கு அழைப்பு -
தமிழ் மக்களித்த ஜனாதிபதியாக வந்தவர் இன்று தடுமாறிப்போயுள்ளதாகவும் அரசியல் தீர்வுக்கு உடன்பாடு இல்லாமல், வழங்கிய வாக்குறுதிகளை தூக்கியெறிந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இன்று அரசியல் யாப்பினை வழங்குவதை குழப்பிக்கொண்டிருக்கும் மகிந்த அணியுடன் இணைந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்டுமந்தைகள்போல் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பதாகவும் சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கம்பரெலிய திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு ஆயித்தியமலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் கம்பரெலிய திட்டத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.
ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய தலைவர் கே.விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நட்டுவைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் குறித்த வசந்த மண்டபத்தினை அமைப்பதற்காக கம்பரெலிய திட்டத்தின் ஊடாக ஐந்து இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது எங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய போன்றவர்களாவர். இவர்கள் கடந்த காலத்தில் ஒட்டுக்குழுக்களின் மூலம் எமது சகோதரர்களை கடத்தினார்கள், காணாமல் ஆக்கினார்கள். இவர்களுக்கு எதிராக வாக்கு கேட்டே நாங்கள் வந்தோம்.
கடந்தகால ஆட்சிக்கு எதிராக வாக்கு கேட்டே நாங்கள் வென்றோம். யாருக்கு எதிராக வாக்கு கேட்டு நாங்கள் வென்றோமோ அவர்களிடம் சரணாகதி அரசியல் நடத்துவதற்கு அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் எங்களுடைய அரசியல்வாதிகளில் ஒருவரைத் தவிர எவரும் பணத்திற்காகவோ அமைச்சுப் பதவிகளுக்காகவோ தாவித்திரியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தபோது 46000வாக்குகளைப் பெற்ற தங்கேஸ்வரி மகிந்தவுடன் இணைந்தபின்னர் 1600வாக்குகளை மட்டுமே பெற்றார். அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பியசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டதற்காக மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். தற்போது அவரை காணமுடியவில்லை.
மதிப்பிற்குரிய ராசதுரை ஐயா தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டபோதெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு மறைந்துபோய்விட்டார். அதேபோல் வியாழேந்திரனும் அவசரப்பட்டு யாருக்கும் தெரியாமல் கட்சி மாறியிருக்கின்றார். மக்களுக்காகவும் மண்ணிற்காகவும் சென்றதாக அதை நியாயப்படுத்துகின்றார்.
எங்களையும் பேரம் பேசினார்கள். அமைச்சுப் பதவிகளை பெற்றுத் தருகின்றோம், சகல வசதிகளையும் செய்து தருகின்றோம், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து தருகின்றோமென தொலைபேசியூடாக எங்களிடம் பேரம் பேசினார்கள். ஆனால் நாங்கள் அசையவில்லை. எங்களுக்கு ஒரு கட்சி. ஒரு தலைவர், ஒருகொள்கை இருக்கின்றது. அந்தக் கொள்கையை விட்டு நாங்கள் பிசகமாட்டோமென உறுதியாகச் சொன்னோம்.
இறுதியில் மகிந்த ராஜபக்சவுடன் பேசுவதற்கு கொழும்புக்கு வருமாறு கேட்டார்கள். ஆனால் எங்கள் தலைவருடன் பேசி ஒரு முடிவெடுங்கள், நாங்கள் வருவதற்கு தயாராக இருக்கின்றோம் என கூறினோம். பணத்திற்காக வரமாட்டோம், அரசியல் தீர்வு வேண்டும், அபிவிருத்தி வேண்டும், கைதிகளின் விடுதலை வேண்டும், காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும். இதற்காக வருவோமே தவிர பணத்திற்காகவோ பதவிக்காகவோ வரமாட்டோமென கூறியிருந்தோம்.
அண்மையில் ஒரு பத்திரிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மந்தைகள் போன்று இருகைகளையும் உயர்த்தினார்கள் என்று ஒரு செய்தியை பார்த்தேன். தற்போதைய ஜனாதிபதி வாக்களித்து ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் நாங்கள் தான் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது ஜனாதிபதி தடுமாறிப்போயிருக்கின்றார். அரசியல் தீர்விற்கு அவர் உடன்பாடில்லை. சொன்ன வார்த்தைகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டார்.
நாங்கள் தேர்தலில் யாரை தோற்கடித்தோமோ அவரை பிரதமராக்கியிருந்தார். மகிந்தஅணியினர் தான் அரசியல் யாப்பை தருவதற்கு குழப்பிக்கொண்டிருக்கின்றார்கள்;. அவரோடு இணைந்திருக்கின்ற வியாழேந்திரன் எம்மை மந்தைகள் போன்று செயற்படுவதாக கூறியிருக்கின்றார்.
எவன்எவன் எதனைச்சொல்கின்றார்களோ அவனவன் அதுவாக மாறுகின்றான்.அதனை கதைப்பவரே அதுவாக மாறுகின்றார். ஆகவே காலம் பதிலளிக்கும். பதவி சுகத்தினை அனுபவிப்பதற்காக சிலர் ஆட்சிமாற்றத்தினை எதிர்பார்க்கின்றனர். இதற்குரிய பாடங்களை புகட்டவேண்டிய காலம்வரும்.
மண்னை நேசிப்பதாக கூறுவார்கள், மக்களை நேசிப்பதாக சொல்வார்கள். தேர்தலுக்கு முன்னர் எப்படி இருந்தோம் தேர்தலுக்கு பின்னர் எப்படி இருந்தோம் என்பதை பார்க்கவேண்டும். தேர்தலுக்கு முன்னர் நான் வாடகை வீட்டில் இருந்தேன் இன்றும் அவ்வாறுதான் இருக்கின்றேன். ஆனால் சிலருக்கு நிலம்வருகின்றது, மாடிகள் வருகின்றது, கோடிகள் வருகின்றது. இவ்வாறானவர்கள் காதுகளில் பூ சுத்துவதற்கு யாரும் அனுமதிக்ககூடாது என்றார்.
மகிந்தவுடன் பேச கொழும்பு வருமாறு கூட்டமைப்பினருக்கு அழைப்பு -
Reviewed by Author
on
March 31, 2019
Rating:

No comments:
Post a Comment