உலக கிண்ண தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா வெளியேற்றம்:
உலக கிண்ணம் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 30-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பஹார் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் இணைந்து கவனமாக தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டனர். இதில் ஓரளவு ரன் சேர்த்த பஹார் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் தலா 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து முகமது ஹபீஸ் 20(33) ஓட்டங்களில் வெளியேற, மறுமுனையில் பாபர் அசாம் மற்றும் ஹாரிஸ் சோகைல் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் தனது அரைசதத்தை பதிவு செய்த பாபர் அசாம் 69(80) ஓட்டங்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய இமாத் வாசிம், ஹாரிஸ் சோகைல் உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.
தொடர்ந்து இமாத் வாசிம் 23(15), வஹாப் ரியாஸ் 4(4), அதிரடியாக ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த ஹாரிஸ் சோகைல் 89(59) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை எடுத்தது.

தென்ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக நிகிடி 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், பெலக்வாயோ மற்றும் மார்க்ராம் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 309 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணியின் சார்பில், ஹசிம் அம்லா மற்றும் டி காக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
அதில் ஹசிம் அம்லா 2(3) ஓட்டங்களில் வெளியேற, டி காக்குடன், அணித்தலைவர் டூ பிளஸ்சிஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் அணியின் ரன் வேகம் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் டி காக் 47(60) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்க்ராம் 7(16) ஓட்டங்களும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை பதிவு செய்திருந்த டூ பிளஸ்சிஸ் 63(79) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து ரஷி வாண்டர் டூசன் 36(47), டேவிட் மில்லர் 31(37), அதிரடி காட்டிய கிறிஸ் மோரிஸ் 16(10), ரபடா 3(7), நிகிடி 1(6) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தனி நபராக போராடிய பெலக்வாயோ 46(32) ஓட்டங்களும், இம்ரான் தாஹிர் 1(3) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக வகாப் ரியாஸ் மற்றும் ஷதப் கான் 3 விக்கெட்டுகளும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளும், ஷகின் அப்ரிதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
புள்ளி பட்டியலில் 9-ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா இதனால் உலக கிண்ணம் தொடரில் இருந்து வெளியேறுவது முடிவாகியுள்ளது.

உலக கிண்ண தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா வெளியேற்றம்:
Reviewed by Author
on
June 24, 2019
Rating:
No comments:
Post a Comment