தமிழின் தனித்துவம்... தமிழனின் மகத்துவம்...
" தமிழின் தனித்துவம்...தமிழனின் மகத்துவம்..."
சுந்தரத் தமிழை
அந்தரத்தில் பேசினால்
எந்திர உலகில்
மந்திரம போலல்லவா இருக்கும்
அகிலத்தை ஆள ஆங்கிலம் வேண்டுமாம்
அன்னைத்தமிழின் அருமை பெருமைகளை மறந்து-எருமைகளாக
அடிமை வாழ்வு வாழும்
அன்புத்தமிழினமே….அழுகிறது தமிழ்மனமே..
குறையில்லா மொழியை
முறையில்லா வழியில்
குறைகாண முனையும்
குருட்டுப்பூனைகளே…யானைகளே
கண்ணை மூடினால் இருட்டு உனக்கு மட்டும் தான்
உதயன் மறைந்தால் தான் உலகுக்கே இருட்டு
என் தாய்மொழி
கதிரவனையும் தனக்குள்ளே கொண்ட கண்ணொளி
காலத்தால் ஒரு போதும் கரையாது…மறையாது…குறையாது.
அன்னைத்தமிழுக்கு அணிசெய்வோம்
அயராது பணிசெய்வோம்
கணணியில் தமிழ் தவழ்கிறது-எம்
தரணியெங்கும் தமிழ் மொழி
கல்வெட்டில் இருந்து கணணிக்கு-இது
காலமாற்றம் தான்-கங்கனம் கட்டும்
தமிழனிடம் தமிழில்லையே-இதுவும்
காலமாற்றம் தான் இதுவும் முன்னேற்றம் தான்
எத்தனை எத்தனை அம்சங்கள்
எத்தனை மொழிக்கும் தந்த வம்சங்கள்
எமனுக்கும் எம்மொழி அங்குசம்
எல்லோருக்கும் செம்மொழி பரவசம்
எத்தனை அழிவுகள் வந்தாலும்
அத்தனையும் அழிந்து போகும்
தீர்ந்து போக குட்டையல்ல
தீரம் கொண்ட சமுத்திரம் தமிழ் மொழி
ஏழாம் இடத்தில் இப்போ தமிழ் மொழி
எல்லா தமிழனும் தமிழை
தலைமேற்கொண்டால்
தரணியே தமிழ்மொழி தாண்டா…
தமிழ் நீச மொழியல்ல
தமிழ் நேச மொழி
பயபக்தியின் பாச மொழி-தூய
தமிழ் செம்மொழி இதற்கு உண்டு தனிவழி
தமிழ் இனி மெல்லச்சாகும்
தனித்து இயங்காது தமிழ் என்று
அடிநாக்கில் அன்னைத்தமிழை புதைத்து
அகோரமாய் நுனி நாக்கில் ஆடும் ஆங்கிலத்தாண்டவம்
மொழியில் ஆங்கிலத்திடமும்
விழியில் சினிமாவிடமும்-உரிமை
வழியில் பெரும்பான்மையிடமும்-சவ
குழியில் கிடக்கும் தமிழினமே….
தூரோடும் வேரோடும்
ஊரோடும் யாரோடும்
காடோடும் நாடோடும்
பாரோடும் வாழும் தமிழினமே….
பதினொரு தகுதியும்
பதினாறு இயல்மையைப்பெற்ற
பார்போற்றிடும் பரவசமொழி-அறிஞர் கூற்று
பக்திமொழி செம்மொழி-எம்மினமே விழி
தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
முன்மை வியன்மை வளமை மறைமை
எண்மை இளமை இனிமை தனிமை
ஓண்மை இறைமை அம்மை செம்மை
எனும் பதினாறும் இற்றமிழில் இயல்பெனப்
பன்னுவர் மொழிவலர் பாவணர்தாமே….
தமிழன் எறும்பாக
தமிழ் படிக்கும் தமிழன் கரும்பாக
தமிழுணர்வு வெடிக்கும் கரங்கள் இரும்பாக
காலனும் தமிழன் காலில் துரும்பாக….
சீரிய தமிழைச்சிறப்பாய் உயர்த்த-தமிழா
பாரிய சேவை தமிழ்மொழிக்கு தேவை
தமிழின் தனித்துவம்...
தமிழனின் மகத்துவம்...
கவிஞர் -வை.கஜேந்திரன்BA
தமிழின் தனித்துவம்... தமிழனின் மகத்துவம்...
Reviewed by Author
on
June 30, 2019
Rating:

No comments:
Post a Comment