அண்மைய செய்திகள்

  
-

முஸ்லிம் தலைமைகள் உணர வேண்டியது இது தான்: சிவசக்தி ஆனந்தன் -


என்னதான் தலைகீழாக நின்று விலாங்கு மீன் போன்று சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்தாலும் ஒரு நிலைக்குமேல் சிங்கள பௌத்த மேலாதிக்கம், முஸ்லிம்களை ஒரு கட்டத்திற்கு மேல் வளரவிடாது என்பதை முஸ்லிம் தலைமைகள் இனியாவது உணர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த மண்ணிலிருந்து அன்னியப்பட்டு, தங்களை அரேபியர்களாகக் காட்ட முனைவதிலிருந்து விடுபட்டு முன்பிருந்த இலங்கையர்களாகவும், தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாகவும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,
இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதிகளினால் கிறிஸ்தவர்களையும், தமிழர்களையும் நாட்டின் சுற்றுலாத்துறையையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. தென்பகுதியிலும் மட்டக்களப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பல கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், இந்து சமுத்திர மற்றும் பசிபிக் சமுத்திரப் பிராந்தியங்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனால் அமெரிக்கா, இஸ்ரேல், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையின் மீது அதிக அக்கறை கொண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இச்சின்னஞ்சிறிய தீவின் மீது தமது ஆழமான பார்வையைச் செலுத்தியுள்ளன.

பௌத்த மதத்தினரோ அல்லது சிங்கள சமூகத்தினரோ அதிகளவில் இறக்கவில்லை என்பதால் பாரிய இனக்கலவரம் ஒன்று தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. மத அடிப்படைவாத தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் சாதாரண இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு நிலவுவதைக் காண முடிகிறது.
இதனை சில அரசியல் சக்திகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முனைகின்றன. இதில் அனுதாபம் தேடும் அரசியல்வாதிகளும் உள்ளனர். இதனைப் பயன்படுத்தி தமது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்பவர்களும் உள்ளனர்.

ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் ஒன்றுபட்டு போராடிய வேளையில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அந்த ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில் மலையகத் தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் தனித்தனியாகப் பிரித்தெடுத்தார்.
அதுவரையில் இஸ்லாமியர்கள் தம்மை தமிழ்த் தேசிய இனத்துடனேயே அடையாளப்படுத்திக் கொண்டனர். தமிழ்த் தேசிய இனத்தைத் தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவரால் திட்டமிட்டு இஸ்லாமியர்கள் முன்னேற்றப்பட்டார்கள்.
ஊர்காவல்படை, ஜிகாத், புலனாய்வாளர்கள் என்ற பெயரிலும் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக ஆயுதங்களும் வழங்கப்பட்டு தமிழர்களுக்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டனர்.
மறுபுறம் தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்களைப் பறித்து அந்த இடங்களில் இஸ்லாமியர்கள் நியமிக்கப்பட்டனர். இது பல அறிஞர்களையும் கல்விமான்களையும் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு வித்திட்டதுடன், ஏராளமான இளைஞர்கள் புலம்பெயர்வதற்கும் வழிகோலியது.

ஜே.ஆரினால் தொடக்கி வைக்கப்பட்ட இந்த அணுகுமுறை அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அமைப்பே இந்திய - இலங்கை உடன்பாட்டின் பின்னர் தான் உருவாக்கப்பட்டது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
மகிந்தராஜபக்ச தனது அரசியலை முன்னெடுக்கும் நோக்கில் முஸ்லிம் காங்கிரசை உடைத்து அதிலிருந்து றிஷாட்டைப் பிரித்தெடுத்து ஒரு கட்சியை ஆரம்பிக்க வைத்து தனக்கு ஆதரவாளராக மாற்றியதுடன், 2004ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து பின்னர் அமைச்சராகவும் ஆக்கினார்.
இன்று தமிழ்த் தேசிய இனத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டுவிட்டது. மிதவாத தலைவர்கள் என்று சொல்லப்படக் கூடிய தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் முன்னரைப் போலவே ஐக்கிய தேசியக் கட்சியின் அடிவருடிகளாக பேரினவாத சக்திகளின் எடுபிடிகளாக அல்லது அவர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் திராணி அற்றவர்களாக மாறி தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை தேர்தல் வெற்றிக்கான வெற்று முழக்கமாக மாற்றியுள்ளனர்.

இத்தகைய நிலையில் தென்னிலங்கை பேரினவாத சக்திகள் அனைவரதும் தேவையும் முடிந்துவிட்டது. இப்பொழுது தங்களது சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை முன்னெடுப்பதற்கு அனைவரையும் பகைத்துக்கொள்ளத் தயாராகிவிட்டனர். இதுதான் யதார்த்தம்.
இதனை இஸ்லாமிய சமூகம் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறது என்பது தான் கேள்வி. என்னதான் தலைகீழாக நின்று விலாங்கு மீன் போன்று சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்தாலும் ஒரு நிலைக்குமேல் சிங்கள பௌத்த மேலாதிக்கம் அவர்களை ஒரு கட்டத்திற்கு மேல் வளரவிடாது என்பதை அவர்கள் இனியாவது உணர வேண்டும்.
அன்று தமிழ் தேசிய இனத்துடன் இணைந்திருந்த இஸ்லாமியர்களிடம் உத்தியோகபூர்வமாக ஆயுதங்களைக் கொடுத்து அவர்களுக்கு அரசாங்க ஊதியமும் வழங்கி தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதற்கு சிங்கள பௌத்த மேலாதிக்க ஆளும் வர்க்கம் இஸ்லாமிய சகோதரர்களைப் பயன்படுத்தியது.

இதனை அன்றைய தலைவர்கள் அரசாங்கத்துடன் இணங்கிப் பயணிப்பதால் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது என்று வெற்றி முழக்கமிட்டு தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்கள் மீதான வெறுப்புணர்வை சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளுடன் இணைந்து கக்கினர்.
இன்று அதே மேலாதிக்க சக்திகள் தனது தேவை முடிந்துவிட்டதால் தமிழ்ச் சமூகத்தைப் பயன்படுத்தி மத அடிப்படைவாத பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தமிழர்களைப் பயன்படுத்த முனைகிறது. பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலை நன்குணர்ந்த நாம் அதற்கு சம்மதிக்கவில்லை என்பதையும், நாம் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராகவே போராடுகிறோம் என்பதையும் எமது கோரிக்கை நியாயமானது என்பதையும் இஸ்லாமியர்கள் இப்பொழுதாவது புரிந்துகொள்ள முன்வரவேண்டும்.

ஏதோ சிங்கள மக்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்திவிட்டதாகவும் அவர்களை இனியும் விட்டு வைக்கக்கூடாது என்றும் தென்பகுதி அரசியல்வாதிகள் சிலராலும் பெரும்பான்மையின மதவாதிகளாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் இறந்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்று அறிந்ததும் அந்த சூடு அதேவேகத்தில் குறைவடைந்துவிட்டது.
இருப்பினும், இஸ்லாமியர்களின் வளர்ச்சியை சகிக்க முடியாத சில தென்னிலங்கை அடிப்படைவாத சக்திகளும் சிங்கள மக்களுக்குத் தாமே பாதுகாவலர்கள் என்ற தோரணையில் செயற்படும் சில அரசியல்வாதிகளும் இதனைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இஸ்லாமியர்கள் தமது மத அனுஷ்டானங்களை இப்படித்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று பெரும்பான்மைச் சமூகம் முடிவெடுக்கும் நிலை தோன்றியுள்ளது. இது ஆபத்தானது.

நாளை ஏனைய மதங்களுக்கும் இந்நிலை வரக்கூடும். இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். அதே நேரம் இஸ்லாமியர்களும் 1980களுக்குப் பின்னர் தம்மீது தாங்களாவே திணித்துக்கொண்டு, இந்த மண்ணிலிருந்து அன்னியப்பட்டு, தங்களை அரேபியர்களாகக் காட்ட முனைவதிலிருந்து விடுபட்டு முன்பிருந்த இலங்கையர்களாகவும் தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாகவும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தலைமைகள் உணர வேண்டியது இது தான்: சிவசக்தி ஆனந்தன் - Reviewed by Author on June 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.