இருபதாம் ஆண்டு நினைவேந்தலின் போது ஈழத்தில் தமிழனே இருக்கமாட்டான்! ஆதங்கத்தை வெளிப்படுத்திய குரல் -
முள்ளிவாய்க்கால் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தலின் போது ஈழத்தில் தமிழனே இருக்க மாட்டான் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு தஞ்சாவூர், விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் நமது கடமை முடிந்து விடாது. ஈழத்தில் மக்கள் அழிவின் விளிம்பில் இருந்து கதறி கொண்டிருக்கின்றனர்.
அவர்களை காப்பாற்ற வேண்டிய கடமை தமிழ் நாட்டை சேர்ந்த ஏழரை கோடி மக்களுக்கும் உண்டு. அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று, அவர்களை காக்க முன்வர வேண்டும். நாம் ஒன்றுபட்டு நின்றால், உலகை ஈழத் தமிழர்களின் பக்கம் நம்மால் திருப்ப முடியும்.
முள்ளிவாய்க்கால் மக்களுக்கு உலக சமுதாயம் செய்ய வேண்டியதை செய்யவில்லை. இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து திட்டமிட்ட இன அழிப்பு நடைபெற்று வருகிறது.
அங்கு இன அழிப்பு என்றால் படுகொலை மட்டுமல்ல. அவர்களுடைய பண்பாடு, அடையாளங்களும் அழிக்கப்படுகின்றன.
இப்படி தொடர்ந்து ஈழ தமிழினத்தை அழித்து ஒழிக்கும் முயற்சியில் சிங்களப் பேரினவாதிகள் ஈடுபடுகின்றனர். இன்னும் அந்தக் கொடுமைகள் தொடர்கின்றன.
ஈழத்தில் தமிழினம் ஒரு மிகப்பெரிய இன அழிப்புக்கு ஆளானபோது, உலகமே வேடிக்கை பார்த்தது. ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டது என்றாலும், எதுவுமே நடக்கவில்லை. இந்த அழிவுக்கு காரணமானவர்கள் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
உலகம் நம்மை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தமிழினம் இந்தப் பேரழிவுக்கு ஆளானபோது நம்முடைய தமிழ் நாட்டில் பல பெரும் போராட்டங்களில் ஏராளமான மக்கள் எழுச்சியுடன் ஈடுபட்டனர். ஆனால், உலகம் எதற்கும் செவி சாய்க்கவில்லை.
ஈழத்தில் மிச்சம் இருக்கக்கூடிய மக்களாவது பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நிலைமை இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்குமானால், முள்ளிவாய்க்கால் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தலின் போது அங்கு தமிழனே இருக்க மாட்டான் என குறிப்பிட்டுள்ளார்.
இருபதாம் ஆண்டு நினைவேந்தலின் போது ஈழத்தில் தமிழனே இருக்கமாட்டான்! ஆதங்கத்தை வெளிப்படுத்திய குரல் -
Reviewed by Author
on
July 08, 2019
Rating:

No comments:
Post a Comment