உருவாக போகிறதா முஸ்லிம் கூட்டமைப்பு? கூட்டு இராஜினாமாவின் நோக்கத்தை கூறும் ரிஷாத் -
முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க போவதான பேச்சுக்கள் எதுவும் உத்தியோக பூர்வமானதாக நடைபெற்றிருக்கவில்லை என முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, முஸ்லிம் பிரதிநிதிகள் கூட்டாக இராஜினாமா செய்திருக்கும் நிலையில் அடுத்துவரும் காலப்பகுதியில் “முஸ்லிம் கூட்டமைப்பு” உருவாக்க போவதாக கூறப்படுகின்றதே என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றன, ஆனால் அத்தகைய பேச்சுக்கள் எதுவும் உத்தியோகபூர்வமானதாக நடைபெற்றிருக்கவில்லை. எமது கூட்டு இராஜினாமா அரசியல் நோக்கம் கொண்டதல்ல.
பதற்றமான நிலைமையில் காடையர்களை ஒருங்கிணைத்து பௌத்த தேரர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளால் மீண்டும் இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் இனக்கலவரம் வெடிக்கும் நிலைமையே ஏற்பட்டிருந்தது.
நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கு தேரர்கள் சதி செய்திருந்தனர். காடைத்தனத்தினை தடுப்பதற்கான வல்லமை அற்று முதுகெலும்பில்லாத அரசாங்கமாக இருந்தது. இதனால் தான் நாம் கூட்டாக இராஜினாமா செய்து இனக்கலவரத்தை தடுத்தோம்.
கலவரம் நடைபெற்றிருந்தால் முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி இந்த நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கும். அத்தகையதொரு சூழல் ஏற்படாதிருக்கவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இராஜினாமா செய்திருந்தோம்.
தற்போதும் நாம் ஒற்றுமையாகவே சமூகம் சார்ந்தும், நாடு சார்ந்தும் செயற்படுகின்றோம். மேலும் தேர்தலொன்று அறிவிக்கப்படுகின்றபோது தான் அது பற்றி (கூட்டமைப்பு) சிந்திக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உருவாக போகிறதா முஸ்லிம் கூட்டமைப்பு? கூட்டு இராஜினாமாவின் நோக்கத்தை கூறும் ரிஷாத் -
Reviewed by Author
on
July 08, 2019
Rating:

No comments:
Post a Comment