இந்துக்களுக்கு எதிரான திட்டமிட்ட செயல்களைக் கண்டித்து போராட்டத்துக்கு அழைப்பு
இந்து ஆலயங்களில் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இப்போராட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெறவுள்ளது.
இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிக அமைதியான முறையில் இடம்பெறவுள்ளது.
இது குறித்து அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூறுகையில், “சமீப காலமாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அமைந்திருக்கும் இந்து ஆலயங்களான வெடுக்குநாரி சிவன் ஆலயம், கன்னியா பிள்ளையார் ஆலயம், கந்தப்பிள்ளை விநாயகர் ஆலயம் போன்றவையும் திருக்கேதீச்சர ஆலய வளைவு பிற சமயத்தவர்களால் முறையே அழிக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் வருகின்றன.
பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதனூடாக இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை தற்போது எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த அதர்ம செயல்களைக் கண்டித்தும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் எதிர்வரும் சனிக்கிழமை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் நல்லை ஆதீன முன்றிலில் இந்து அமைப்புகள் ஒன்றியமும் இந்து சமயப் பேரவையும் இணைந்து அமைதி வழி போராட்டத்தை முன்னெடுக்கின்றது.
இச்செயற்பாட்டில் அனைத்து இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலய அறங்காலவலர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாது பங்குகொண்டு இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தி வன்முறையாளர்களின் அத்துமீறல்களை அவர்களுக்கு உணர்த்த முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்துக்களுக்கு எதிரான திட்டமிட்ட செயல்களைக் கண்டித்து போராட்டத்துக்கு அழைப்பு
Reviewed by Author
on
August 01, 2019
Rating:

No comments:
Post a Comment