பிரபாகரனுக்கு உதவியதாலேயே இந்த நிலை ஏற்பட்டது-விஜேதாஸ ராஜபக்ச
தமிழ்நாட்டில் பிரபாகரனுக்கு பயிற்சி முகாம்கூட அமைத்துக்கொடுத்து உதவியதால் எமது நாடு மிகவும் துரதிஷ்டவசமான 30 வருடப் போருக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பை வைத்திருந்த இலங்கையர்கள் குறித்து தாம் அம்பலப்படுத்திய போதே விசாரணை நடத்தியிருந்தால் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுத்திருந்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் .
“ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்த இலங்கையர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நான் அம்பலப்படுத்தியிருந்தேன்.
ஆனால் அப்போது நான் அரசியல் செய்வதாகவும், முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியிலுள்ள சிலர் விமர்சித்திருந்தனர்.
ஆனால் இப்போது என்ன நடந்தது? அநியாயமாக 250க்கும் அதிகமான எமது பெறுமதிமிக்க மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
நான் அந்த தகவல்களை வெளியிட்டபோதே இன்றுபோல நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்து விசாரணை செய்திருந்தால் தாக்குதல்களைத் தடுத்திருந்திருக்கலாம். இழப்புக்களும் ஏற்பட்டிருக்காது”
உலகம் இரண்டு பலம்வாய்ந்த பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார சக்திகளே உலகத்தை ஆட்சிசெய்கின்றன. டொலர் என்கிற கடதாசிக்கு குண்டுகளைப் பார்க்கவும் பலம் அதிகம்.
இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் ஒரு தீவாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். எமது அயல்நாடான இந்தியாவிடத்தில் எமக்குத் தேவையான பாதுகாப்பு பெற்றுக்கொள்ள இருக்கும் சந்தர்ப்பத்தை இழந்துவிடக் கூடாது.
கடந்தகால தலைவர்கள் தீர்க்கதரிசனமாக சில முடிவுகளை எடுத்தபடியினால் இந்தியா போன்ற நாடுகள் குறிப்பாக தமிழ்நாட்டில் பிரபாகரனுக்கு பயிற்சி முகாம்கூட அமைத்துக்கொடுத்து உதவியதால் எமது நாடு மிகவும் துரதிஷ்டவசமாக 30 வருடப் போருக்கு முகங்கொடுத்தது.
இந்த வகையான சந்தர்ப்பத்திற்கு மீண்டும் எமது நாடு செல்லக்கூடாது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு அரசாங்கம் வழங்கியதால் இந்தியா, அமெரிக்கா, மேற்குலக ஐரோப்பிய நாடுகளின் உறவுகள் சரிந்தன.
இதன் பிரதிகூலமாகவே குண்டுத் தாக்குதல்களை நாங்கள் எதிர்கொண்டோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு உதவியதாலேயே இந்த நிலை ஏற்பட்டது-விஜேதாஸ ராஜபக்ச
Reviewed by Author
on
August 10, 2019
Rating:

No comments:
Post a Comment