இலங்கை அணி அபார வெற்றி....
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஓருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இந்த தொடரின் மூன்றாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்துடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணி சார்பாக, அஞ்சலோ மத்தியூஸ் 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன் குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களையும், குசல் பெரேரா 42 ஓட்டங்களையும் மற்றும் தசுன் சானக 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் ஷாபில் இஸ்லாம் மற்றும் சௌமிய சர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் 295 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் மிரட்டலால் வெற்றியை தவறவிட்டது.
பங்களாதேஷ் அணி, 36 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்தவகையில், இலங்கை அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக, சௌமிய சர்கர் 69 ஓட்டங்களையும், தைஜூல் இஸ்லாம் 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் சோபிக்கவில்லை.
பந்துவீச்சில், தசுன் சானக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேலும், அகில தனஞ்சய, வனிது ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி 3:0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
இலங்கை அணி அபார வெற்றி....
Reviewed by Author
on
August 01, 2019
Rating:

No comments:
Post a Comment