குற்றவாளிகளை தண்டியுங்கள்! நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து -
முல்லைத்தீவு, நீராவியடி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அரசை வலியுறுத்துகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று முல்லைத்தீவு, நீராவிடியடிப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள், நீதிமன்ற உத்தரவை அவமதித்து பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்ற நீதி நிலைநாட்டுவதற்குத் தவறிய மாத்திரமன்றி, அது மீறப்படும் போது அதற்கு வசதியேற்படுத்திய பொலிஸாரையும் உள்ளடக்க வேண்டும்.
முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் புராதனமிக்கது. அங்கு 2004 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேதாலங்கார கீா்த்தி என்ற பௌத்த பிக்கு ஒருவரால் குருகந்த புராண ராஜமகா விகாரை என்ற பெயரில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டது.
அப்போது அந்தப் பகுதி மக்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் விகாரை கட்டும் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.
சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உயிரிழந்தார். அவரது பூதவுடலை முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி ஏற்றம் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயக் காணியில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு அந்தப் பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நீராவியடிப் பிள்ளையார் ஆலயக் காணியில் பிக்குவின் உடலை தகனம் செய்யக் கூடாது என உத்தரவிட்டது.
ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு குற்றம் ஒன்றிற்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து அரச தலைவரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற்ற கலபட அத்தே ஞானசார தேரர் கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வந்து நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி அவரது ஆதரவாளர்களுடன் அந்த இந்து கோயிலுக்கு அருகாமையில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்துச் செயற்பட்ட அவருக்கு எதிராக அரசு இருவாரங்கள் கடந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பௌத்த தேரரின் இறுதிக் கிரியையின் போது அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் அதைச் செய்யாமல் மௌனம் காத்தனர்.
இந்த செயற்பாடுகளின் போது அங்கு சமூகமளித்திருந்த ஆலயத் தலைமைக் குரு மற்றும் சட்டத்தரணிகள் கூடத் தாக்கப்பட்டுள்ளனர்.
அங்கு குழுமியிருந்த பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டவர்களை தடுக்கத் தவறி விட்டனர். இது இந்து மக்களின் உரிமையை மீறும் செயல். இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் கூற்றுக்கு அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பதில் வழங்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை தண்டியுங்கள்! நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து -
Reviewed by Author
on
October 09, 2019
Rating:

No comments:
Post a Comment