ஓரங்கட்டப்பட்ட இலங்கை தமிழர்கள்.. குடியுரிமைத் திருத்த மசோதா தொடர்பில் கமலஹாசனின் நிலைப்பாடு இது தான்!
குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியுள்ள போதிலும், மாநிலங்களவையில் நிறைவேறுமா என்ற கேள்வியுள்ளது.
245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியுரிமை மசோதா குறித்து மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல் இன்று வெளியிட்ட அறிக்கை:
''அரசியலமைப்புச் சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது. ஆனால் பிழை இல்லா நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகமே.
நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகரானது இன்று மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும். இந்தியாவை ஒருசாரர் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை.
காந்தியின் 150-வது பிறந்த நாளை, அவர் மறைவு நாளாக மாற்றிவிட்டால் அவர் கனவு கண்ட இந்தியா உருத்தெரியாமல் அழிந்துவிடுமா என்ன?
முயன்று தோற்றவர், மீண்டும் முயல்கின்றனர். இது “பாமர இந்தியாவல்ல” உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க.
“இளம் இந்தியா” விரைந்து இது போன்ற திட்டங்களை நிராகரிக்கும். எங்கள் தாய்நாட்டை தந்தையர் நாடாக மாற்ற முயலும் பிதா மஹாக்களுக்கு இது புரிய வேண்டும்.
மய்யத்தின் வாதம், “இதில் கொஞ்சம்“, “அதில் கொஞ்சம்“ கலந்து பசியாறும் சந்தர்ப்பவாதமல்ல.
நமக்குப் பின்னும் நல்லதே நடக்க வித்திடும் சிந்தனைகளைப் பற்றித் தொடரும் பெருங்கூட்டம் நாம்.
அச்சிந்தனைகளை மய்யம் கொள்ளச் செய்யச் சூளுரை ஏற்றவரே எம் மய்யத்தார் என கமல் கூறியுள்ளார்.
ஓரங்கட்டப்பட்ட இலங்கை தமிழர்கள்.. குடியுரிமைத் திருத்த மசோதா தொடர்பில் கமலஹாசனின் நிலைப்பாடு இது தான்!
Reviewed by Author
on
December 12, 2019
Rating:

No comments:
Post a Comment