அண்மைய செய்திகள்

recent
-

சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்?


1893ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி 127 ஆண்டுகள் ஆகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது.

விவேகானந்தரின் இந்த உரை பற்றி பரவலாக அனைவரும் குறிப்பிடுவதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த உரையில் இடம்பெற்ற கருத்துகள் பற்றி அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. எனவே, விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரையின் முக்கிய கருத்துகளை சுருக்கமாக பார்க்கலாம்.

1. எனது அருமை அமெரிக்க‍ சகோதர, சகோதரிகளே! நீங்கள் நேசத்துடன் என்னை வரவேற்ற பண்பு என் மனதை நிறைத்துவிட்டது. உலகின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரை மற்றும் அனைத்து மதங்களின் அன்னையின் சார்பாக நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

2. இந்த மன்றத்தில் பேசிய சில பேச்சாளர்கள், உலகில் சகிப்புத்தன்மை என்ற கருத்து கீழ்த்திசை நாடுகளிலிருந்து பரவி வருகிறது என்பதை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

3. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது, அவற்றை ஏற்றுக் கொள்ளும் பண்புகளை உலகத்திற்கு கற்பித்த மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமையடைகிறேன். உலகளாவிய சகிப்புத்தன்மையை மட்டும் நாங்கள் நம்பவில்லை, அதோடு எல்லா மதங்களும் உண்மை என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.

4. உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைபடுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், மதத்தலங்கள் அழிக்கப்பட்டு, பின்னர் தென்னிந்தியாவிற்கு தஞ்சம் கோரி வந்த இஸ்ரேல் மரபினர்களுக்கு புகலிடம் கொடுத்த புனித நினைவுகளை கொண்டவர்கள் நாங்கள் என்று பெருமைப்படுகிறேன்.

5. பாரசீக மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துக் கொண்டிருக்கும் மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

6. என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

"எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்

இறுதியிலே கடலில் சென்று

சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்

பின்பற்றும் தன்மை யாலே

துங்கமிகு நெறி பலவாய் நேராயும்

வளைவாயும் தோன்றி னாலும்

அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை

அடைகின்ற ஆறே யன்றோ!"

7. இதுவரை நடந்துள்ள மாநாடுகளில் மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தச் சபை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர், சிக்கல்களில் உழல்கின்றனர், ஆனால் இறுதியில் என்னையே அடைகின்றனர்.

8. இனவாதம், மதசார்பு இவற்றால் உருவான கொடூர விளைவுகள், அழகிய இந்த உலகை நெடுங்காலமாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை வன்முறையால் நிரப்பியுள்ளன. உலகம் ரத்த வெள்ளத்தால் சிவந்துவிட்டது. எத்தனை நாகரீகங்கள், எத்தனை நாடுகள் அழிக்கப்பட்டன என்பதையும் சரியாக சொல்லிவிடமுடியாது.

9. இதுபோன்ற ஆபத்தான அரக்கர்கள் இல்லை என்றால், மனித சமுதாயம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவற்றிற்கான காலம் முடிந்துவிட்டது. இந்த மாநாட்டின் குரலானது அனைத்து விதமான மத வெறிகளுக்கும், வெறித்தனமான கொள்கைகளையும், துயரங்களையும் அழிக்கும் என்று நான் நம்புகிறேன். அது வாளால் ஏற்பட்டாலும் சரி, பேனாவினால் ஏற்பட்டாலும் சரி.


சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்? Reviewed by Author on January 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.