கனடா பாராளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் பதிலால் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம்! -
பாராளுமன்றத்தில் இலங்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் கனடிய பிரதமர் ஈரான் பற்றி பேசியது தமிழ்க் கனடிய மக்களிடம் அதிருப்தியை தந்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கனடிய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்துச்சொல்ல கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பத்தை பிரதமர் ஜஸ்ரின் பயன்படுத்தாமல் நழுவியிருக்கின்றார் என்பதால் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஜஸ்ரினின் பதிலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 26ம் திகதி கனடாவின் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கொன்ஸவேடிவ் கட்சியின் தமிழர் விவகாரங்களுக்கு பொறுப்பானவரும், பல்கலாச்சார மற்றும் கனடா, சீனா உறவுகளுக்கான நிழல் அமைச்சரும், மனித உரினைகள் செயல்பாட்டாளரும், அல்பேர்ட்டா மாகாணத்தின் Sherwood Park - Fort Saskatchewan பாராளுமன்ற உறுப்பினருமான கார்னெட் ஜெனுயிஸ் (Garnett Genuis) கனடா பிரதமரிடம் இலங்கை குறித்த இரண்டு பிரச்சினைகளை குறிப்பிட்டு அவை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென விளக்கம் கேட்டுக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இக்கேள்விகள் ஏற்கனவே எழுத்து வடிவில் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் மீதான ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் கடந்த ஜூன் மாதம் இந்தப் பாராளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
தற்போது அந்த தீர்மானத்தின் நிலை என்ன? அது குறித்து அரசாங்கம் தொடர்ந்து என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளதென்றும் "இலங்கை இராணுத்தின் சவேந்திர சில்வாவுக்கு பயணத் தடைகளை அமெரிக்கா அமுலாக்கியுள்ளது. அதை கனடா பின்பற்றுமா?" என்றும் கார்னெட் ஜெனுயிஸ் வினவியுள்ளார்.
இந்நிலையிலேயே இலங்கை குறித்த கனடிய லிபரல் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதை தவிர்த்து விட்டு கனடா பிரதமர் கேள்விகளை நீர்த்துப்போக வைக்கும் வகையில் பதிலளித்துள்ளார். ஈரானின் பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆதரவு, இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், பாலஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் அசாத் ஆட்சிக்கு ஈரான் அளிக்கும் ஆதரவு என்பவற்றை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும், இலங்கை உட்பட உலகெங்கிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்போம் என்றும் இலங்கை தொடர்பிலான கேள்விகளை திசை திருப்பும் வகையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதிலளித்துள்ளார்.
இதன்போது பதிலை ஏற்றுக்கொள்ளாத பிரதான எதிர் கட்சியான கொன்ஸ வேடிவ் மனித உரிமை மீறல் செய்தவர்கள் மீது இனப்படுகொலை விசாரணைக்கு ஏற்ற வகையில் கனடா அரசாங்கம் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளது.
எழுத்து மூலமாக வழங்கப்பட்ட கேள்விக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரொருவர் தனது கட்சியிலிருந்தும், உரிய பதிலை ஏன் தர முடியவில்லை என்பதையிட்டு கனடா தமிழர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
கடந்த தேர்தலின் போது லிபரல் கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள் மீது பயணத்தடை விதிப்போம் என்றெல்லாம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்து அதிக தமிழ் வாக்குகளை பெற்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.
கனடா பாராளுமன்றத்தில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் பதிலால் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம்! -
Reviewed by Author
on
March 03, 2020
Rating:

No comments:
Post a Comment