இலங்கையை ஆரம்பத்திலே தனிமைப்படுத்தி இருந்தால் நாட்டில் வைரஸ் தொற்று பரவி இருக்காது-I.சாள்ஸ் நிர்மலநாதன் -
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள ஊடக குறிப்பிலே இவ்வாறு கூறியுள்ளார்.
“மார்கழி மாதத்தில் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்கம் உலகத்தின் பல நாடுகளில் பலர் பாதிப்புக்குளாகியும், உயிர் இழப்புக்களை சந்தித்தும் வந்த நிலையில் மாசி மாத ஆரம்பத்தில் இலங்கையை தனிமைப்படுத்தாததன் விளைவையே இன்று நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம்.
மாசி மாதம் விமான நிலையத்தினை மூடி இலங்கையை தனிமைப்படுத்த சந்தர்ப்பங்கள் இருந்தும் இந்த அரசாங்கம் விமான நிலையத்தை மூடாமல் இழுத்தடிப்பு செய்து பங்குனி 2ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தவேண்டும் என்ற சுயநலத்துடன் நடந்து கொண்டனர்.
அதன் பின்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டபோது அரசியல் செல்வாக்கினால் பலர் தனிமைப்படுத்தலுக்கு செல்லாது வெளியில் சென்றதன் விளைவே தற்போது இந்த கொடிய வைரஸ் நாடு முழுவதும் பரவிக்கொண்டு இருக்கின்றது.
அதே நேரம் பலாலி விமான நிலையத்தில் எந்தவிதமான தனிமைப்படுத்தலும் இடம்பெறவில்லை. இலங்கையில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு இரு வாரங்களாகியும் இதுவரை மக்களுக்கு எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை.
சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதாக அறிவித்த அரசாங்கம் சில பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் வழங்கியுள்ளனர்.
அதேநேரம் 2019ம் ஆண்டு புதிதாக இணைக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கமுடியாது என அறிவித்துள்ளனர்.
இதுவும் ஒரு அரசியல் பழிவாங்கலே!அரசாங்கம் அறிவிக்கும் மக்களுக்கான உதவித்திட்டங்கள் வெறும் அறிவிப்புக்களாக மட்டுமே உள்ளன.
தற்போதுள்ள அவசரகால நிலையில் உடனடியாக அரசாங்கம் மக்களுக்கு இரு வாரங்களுக்கு ஏற்ற உலர் உணவுப்பொருட்களை மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி பட்டினி சாவில் இருந்து மக்களை காக்க முன்வரவேண்டும்.
அதே நேரம் எமது மக்கள் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதுடன் வெளியில் செல்லாமல் வீடுகளிலே இருங்கள். அப்போதே உங்கள் குடும்பத்தையும் உங்கள் நாட்டையும் ஆபத்தில் இருந்து காக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை ஆரம்பத்திலே தனிமைப்படுத்தி இருந்தால் நாட்டில் வைரஸ் தொற்று பரவி இருக்காது-I.சாள்ஸ் நிர்மலநாதன் -
Reviewed by Author
on
March 31, 2020
Rating:

No comments:
Post a Comment