வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம் அமைப்பது அரசின் இனவாத செயற்பாட்டின் வடிவமே! -
வவுனியாவில் மக்கள் வாழும் பிரதேசத்தை அண்டி கொரோனா தொடர்பான தடுப்பு முகாம் அமைக்கும் செயற்பாடு இனவாதத்தின் வெளிப்பாடு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அண்மைக்காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இந்த உயிர்கொல்லி வைரஸில் இருந்து மக்களை காப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமே.
எனினும் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதனை பரிசோதிக்கும் தடுப்பு முகாமை வடக்கு கிழக்கை அமையப்படுத்தி அமைப்பதானது பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.
கடந்த வருடம் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகளை உடனடியாக வவுனியாவிற்கே இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்திருந்தது.
இதற்கு வவுனியா மக்கள் எதிர்ப்பை காட்டியபோதிலும் அப்போதைய அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.
இதேபோன்றதான மிகவும் கொடிய நோய் தொடர்பான பரிசோதனைக்காக தற்போது வவுனியாவில் தடுப்பு முகாமை அமைப்பதாக கிடைக்கப்பெறும் செய்திகளை பார்க்கும் போது எமது மக்களை அடிமைகள் என நினைத்து அரசு செயற்படுவதற்கு ஒப்பானதாக காணப்படுகின்றது.
இவ்வாறான முகாம்களை ஹம்பாந்தோட்டையிலோ காலியிலோ அமைப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிப்பதற்கு தடுப்பு முகாம் தேவையெனில் அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களை ஹம்பாந்தோட்டை விமான நிலையத்திற்கு திருப்பி அங்கேயே தடுப்பு
முகாமொன்றை நிறுவி பரிசோதனை செய்வதற்கான இலகுவான வழிவகை இருக்கும் போது எதற்காக வடக்கு கிழக்கை அரசாங்கம் தெரிவு செய்கின்றது என்பது இன அழிப்பிற்கான மற்றுமொரு வடிவமா என எண்ணத்தோன்றுகின்றது என தெரிவித்தார்.
வவுனியாவில் கொரோனா தடுப்பு முகாம் அமைப்பது அரசின் இனவாத செயற்பாட்டின் வடிவமே! -
Reviewed by Author
on
March 14, 2020
Rating:

No comments:
Post a Comment