நாட்டில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை
வங்காள விரிகுடாவுக்கு அண்மையில் நிலைகொண்டுள்ள Amphan சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Amphan சூறாவளி வங்காள விரிகுடாவின் மத்திய கடற்பிராந்தியத்தில் தற்போது நிலைகொண்டுள்ளது.
இதனால் தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்று (18) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடற்கொந்தளிப்பு காரணமாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் கடற்றொழில் நடவடிக்கையில் இன்று ஈடுபடவில்லை.
நிலவும் மழையுடனான வானிலையால் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எல்பிட்டிய கெட்டபொல பகுதியை ஊடறுத்து இன்று காலை வீசிய பலத்த காற்றினால் 32 வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டி – ஹலிவாடிய பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஐந்து மின்கம்பங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கஸ்னாகாவத்த, ஹலிவாடிய, அப்டன் தோட்டம், ஹேயஸ் தோட்டம் மேல்பிரிவு ஆகிய கிராமங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இடர் ஏற்பட்டால் மக்களை அப்பகுதியிலிருந்து வௌியேற்றுவதற்கு 10 மாவட்டங்களுக்கும் முப்படையினரை ஈடுபடுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, நுவரெலியா மற்றும்
கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களுக்காக விசேட நடவடிக்கைகைள முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை
Reviewed by NEWMANNAR
on
May 18, 2020
Rating:

No comments:
Post a Comment