நயினை நாக பூசணி அம்மன் கோவிலில் காலணியுடன் இராணுவம் - கண்டிக்கும் மறவன் புலவு க.சச்சிதானந்தன்
திருக்கோயில்களிலும் திருவீதிகளிலும் செய்யத் தகுந்தன, தகாதன.
பற்பல நூற்றாண்டுகளாகச் சைவர்கள் படிப்படியாக வளர்த்தெடுத்த விதிமுறைகள்.
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுக நாவலர் பெருமான் பட்டியலிட்டுப் பிரசுரமாக வெளியிட்டார்.
அவர் காலத்தில் தமிழ் மரபுகள் சைவ மரபுகள் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தன. போர்த்துக்கேயரின் மேலாதிக்கம் ஒல்லாந்தரின் மேலாதிக்கம் தொடர்ந்த ஆங்கிலேயரின் ஆதிக்கம் மக்களின் மனநிலையில் அடிமை மோகத்தை விதைத்திருந்தது.
முள்முடித் தீநுண்மியான கொரோனாவில் இருந்து காக்கத் தூய்மையான சமூக இடைவெளி, கைகழுவுதல் என நாம் கைக்கொள்வன விதிமுறைகள்.
திருக்கோயிலிலும் இத்தகைய தூய்மை பேணும் விதி முறைகள் இருந்தன, இருக்கின்றன மரபுவழியாக தொடர்வன.
காலணி இன்றியே புத்த சைவ முகமதிய வழிபாட்டிடங்களுள் புகலாம்.
அரசின் காவலரும் படையினரும் நயினாதீவு அருள்மிகு நாகபூசணி அம்மன் கோயில் வளாகத்துள் காலணியைக் கழற்றி வைக்காமல் புகுந்தனர் என்ற செய்தியைப் படித்ததும் சைவ உலகம் நெஞ்சு பதைபதைத்து மனம் புண்ணாகி வேதனை அடைந்தது.
விதிகளைப் பேணுமாறு குடிமக்களிடம் நெருக்குகிற காவல்துறை அதிகாரிகளே இவ்வாறு நடந்து கொண்டார்கள். சைவமும் புத்தமும் 2500 ஆண்டுகளாகப் பேணும் நடைமுறைகளை மறந்தார்கள்.
கண்டி தலதா மாளிகைக்குள் இவ்வாறு போவார்களா? சிற்றூரில் உள்ள புத்த பன்சாலைக்குள் இவ்வாறு போவார்களா?
தமிழ்ச் சைவ நிலப்பகுதிகள் அடிமை கொண்ட நிலப்பகுதிகள் என்று கருதியே இவ்வாறு எதேச்சாதிகாரம் ஆகக் காவலர் நடந்துகொள்கிறார்கள். சைவர்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள். சைவ உலகத்தின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவ்வாறு செய்த காவல்துறை அதிகாரிகள் தம் தவறை உணர்வார்களாக. அவர்களே அதற்குரிய பிராயச்சித்த பரிகார பூசைகளை செய்வார்களாக. அந்தப் பாவங்களை அவர்கள் சுமந்து அவர்கள் வாழ்வு கெடாமல் இருப்பதற்கு வழிபாடே ஒரே வழி.
<br /></div>
நயினை நாக பூசணி அம்மன் கோவிலில் காலணியுடன் இராணுவம் - கண்டிக்கும் மறவன் புலவு க.சச்சிதானந்தன்
Reviewed by Admin
on
June 21, 2020
Rating:

No comments:
Post a Comment