நாட்டின் மிகப் பெறுமதிவாய்ந்த எண்ணெய் குதங்களுக்கு என்ன நேர்ந்தது? இந்தியாவிடமிருந்து மீள பெறப்படுமா....?
திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளக் கட்டியெழுப்புவது மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் என்பன இலங்கை – இந்திய கூட்டுத் திட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அந்த உடன்படிக்கையின் ஒரு இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்த போது, ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் மூலம் இந்த எண்ணெய் குதங்கள் அவர்களின் கீழ் கொண்டுவரப்பட்டன.
பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த எண்ணெய் குதங்களை மீண்டும் இலங்கை கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை. 2017 ஆம் ஆண்டு அப்போதைய பெட்ரோலிய அமைச்சர் சந்திம வீரக்கொடி 15 குதங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்தார்.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட உடன்படிக்கை செல்லுபடியற்றுப்போனதால், அந்த எண்ணெய் குதங்களை கைப்பற்றுமாறு கோப் குழு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
2003 ஆம் ஆண்டு இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் அரசாங்கம் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய, எண்ணெய் குதங்கள் தொடர்பில் சட்ட ரீதியிலான கையளிப்பு ஆறு மாதங்களுக்குள் இடம்பெற வேண்டியுள்ள போதிலும் அது இடம்பெறவில்லை என கோப் குழு தெரிவித்துள்ளது.
எண்ணெய் குதங்கள் இந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டதன் மூலம் இலங்கை மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக பெட்ரோலிய தொழிற்சங்க ஒன்றியம் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றையும் தாக்கல் செய்தது.
இந்த பின்புலத்திலேயே எண்ணெய் குதங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தற்போதைய பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்சம் 25 குதங்களையேனும் மீளப்பெற்றுக்கொள்வதற்கான இயலுமை தொடர்பில் புதிதாக நியமனம் பெற்றுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் கலந்துரையாடுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.இறைமையுள்ள நாடு என்ற ரீதியில் நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை, வௌிநாடுகளிடம் கையளித்துவிட்டு வேடிக்கை பார்ப்பது ஏற்புடையதாக அமையுமா??

No comments:
Post a Comment