சமூக இருப்புக்கான பலமுள்ள அடித்தளம் எமது மக்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது –எருக்கலம் பிட்டியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்
சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் தேர்தலாக இது இருப்பதால், பேரினவாத ஏஜெண்டுகளின் வலையில் விழுந்து, வாக்குகளை நாசமாக்கி விட வேண்டாமென மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
மன்னார், எருக்கலம்பிட்டியில் நேற்று மாலை (18) இடம் பெற்ற தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,
“சிறுபான்மைத் தலைமைகளை பாதுகாக்கும் தேவை இப்போதைய காலகட்டத்தில் இருக்கின்றது. அடுத்த பாராளுமன்றுக்கு பேசாமடந்தைகளும் பொம்மைகளுமே வரவேண்டுமென அதிகார வர்க்கம் எதிர்பார்க்கின்றது. அதற்கு நீங்கள் சோரம்போய் விடக்கூடாது,
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து, நமது சமூகத்துக்கு நடந்தவைகளும், நடந்துகொண்டிருப்பவைகளும் நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியது இல்லை. ஜனாஸா எரிப்புத் தொடர்பில், அரசும் அரச இயந்திரமும் நடந்துகொண்ட முறை உங்களுக்குத் தெரியும். எம்மைச் சீண்ட வேண்டும், கோபத்துக்குள்ளாக்க வேண்டும், பழிவாங்க வேண்டும், எமது உள்ளங்களை நொருக்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே, சர்வதேச விதிமுறைகளையும் மீறி, எமது ஜனாஸாக்களை கண்முன்னே எரித்தார்கள். இதன்மூலம் அவர்கள் இன்பம் காண்கிறார்கள். அதுமாத்திரமின்றி, இவ்வாறான செயற்பாடுகள் சிங்கள ஆதரவுத் தளத்தையும், பேரினவாதிகளுடனான நெருக்கத்தையும் தமக்குப் பெற்றுத்தருமென பெரிதும் நம்புகின்றார்கள். இதுதான் யதார்த்தம்.
பேரினவாதக் கூலிகளுக்கு நீங்கள் வாக்குககளை வழங்கினால், அது சமூகத்தை ஆபத்துக்குள் தள்ளும். பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் சமுதாயத்தில் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு காரணமாக அமையும். எனவே, வரப்போகும் பாராளுமன்றத்தில் சமூகத்துக்கான குரல்கள் ஒலிக்க வேண்டும். அதற்கான உங்கள் வாக்குகளை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
பயங்கரவாதத்துடன் என்னையும் எனது குடும்பத்தையும் வேண்டுமென்று முடிச்சுப்போட்டு, சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர். எனது சகோதரரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மூன்று மாத காலம் காரணமில்லாமல், தடுப்புக் காவலில் வைத்திருப்போர், இப்போது என்னையும் சிறையில் தள்ள முயற்சிக்கின்றனர். மிக உச்சளவில் எனக்கு துன்பம் தருகின்றார்கள். எந்தவொரு அரசியல்வாதியும் எதிர்கொள்ளாத கஷ்டங்களை நான் அனுபவிக்கின்றேன். என்னை பாடாய்ப்படுத்துகின்றார்கள். விசாரணைக்கு அழைத்துவிட்டு, தேவையற்ற கேள்விகளையும் சம்பந்தமில்லாத விடயங்கள் பற்றியும் துருவித்துருவிக் கேட்கின்றார்கள். பெரிய குற்றவாளியை விசாரிப்பது போன்று, ஊடகங்கள் மூலம் கதை பரப்புகின்றார்கள்.
பதினைந்து மாதங்களாக எல்லா விசாரணைகளும் நடந்து முடிந்த பிறகும், தேர்தல் நெருங்கும்போது, இவ்வாறு என்னை மட்டும் திரும்பத் திரும்ப விசாரிப்பதேன்? எமது வெற்றியைத் தடுப்பதும், கட்சியை அழிப்பதும் அதன்மூலம், சமுதாயத்துக்கான எனது குரலை நசுக்குவதுமே அவர்களின் திட்டமாகும்” என்று தெரிவித்தார்.
சமூக இருப்புக்கான பலமுள்ள அடித்தளம் எமது மக்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது –எருக்கலம் பிட்டியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்
Reviewed by Author
on
July 19, 2020
Rating:

No comments:
Post a Comment