மக்கள் போராட்டம் காரணமாக பதவி விலகும் பிரதமர்......
பெயிரூட் வெடிப்பு சம்பவத்தினால் கடும் கோபம் கொண்டுள்ள அந்நாட்டு மக்கள், அரசுக்கெதிராக மேற்கொண்ட போராட்டத்தின்காரணமாக லெபனான் அரசாங்கம் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹஸ்ஸன்
டியாப் அறிவித்துள்ளார்.
பெய்ரூட் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, நாடு தழுவிய அளவில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும், 200 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவத்தில் மக்களின் எதிர்ப்புணர்வுக்கு பதில் அளிப்பது குறித்தும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்பின்னர், லெபனான் தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் ஹஸ்ஸன் டியாப் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதன்போது அவர் கூறுகையில், ‘மக்களுடன் இணைந்து மாற்றத்துக்காக செயல்படவுள்ளேன். ஊழல்புரியும் அரசியல்வாதிகள் தங்கள் செயலுக்காக வெட்கமடைய வேண்டும். அவர்களின் ஊழலே நாட்டின் தற்போதைய மோசமான நிலைக்கு காரணம்’ என கூறினார்.
இதற்கு முன் பிரதமராக இருந்த சாத் ஹரிரி மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற ஹஸ்ஸன் டியாப்பும்
குறுகிய காலத்தில் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது....

No comments:
Post a Comment