அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சராக இருக்கும் பொழுது தமிழை புறக்கணித்த றிசாட், இப்பொழுது தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் கோருகின்றார்

எனது தாய் மொழியான தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் தாருங்கள் - ரிஷாத் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோரிக்கை ( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக நேற்று சாட்சியமளிக்க ஆரம்பித்தார். இதன்போது, தனது தாய் மொழியான தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்கும் வண்ணம் தனக்கு மொழி பெயர்ப்பு வசதிகளை செய்து தருமாறு ரிஷாத் பதியுதீன் ஆணைக் குழுவில் விஷேட கோரிக்கையினை தனது சட்டத்தரணி ஊடாகவும், தனிப்பட்ட ரீதியிலும் முன்வைத்தார்.

 தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் நேற்று ஆணைக் குழுவில் சேவையில் இருக்காத நிலையில், அவருக்கு சிங்கள மொழியில் சாட்சியமளிக்க பரிந்துரைக்கப்பட்ட போதும், அதற்கு விருப்பம் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது தாய் மொழி தமிழ் என்ற ரீதியிலும் அம்மொழி அரசியலமைப்பின் அடிப்படையில் அரச கரும் அமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதற்கு அமைவாகவும், தனக்கு தமிழில் சாட்சியமலிக்க வசதிகளைச் செய்துதருமாரு கோரினார். இறுதியில் அதற்கான ஏற்பாடுகளை சில மணி நேரங்கள் சாட்சிப் பதிவை ஒத்தி வைத்து ஜனாதிபதி ஆணைக் குழு ஏற்படுத்திக் கொடுத்தது.

 எவ்வாறாயினும் , அதன் பின்னர், மொழி பெயர்ப்பாளர் மொழி பெயர்ப்பின் போது விட்ட தவறுகளை திருத்தி இடைக்கிடையே ரிஷாத் பதியுதீன் சிங்கள மொழியில் சாட்சியம் அளித்தமை ஆணைக் குழுவின் கவனத்தை ஈர்த்தது. 21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றது.

 ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சாட்சியம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருதி ஹபீப் மற்றும் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் ஆகியோர் ஆஜராகினர்.

 இதன்போது ஆணைக் குழுவின் தலைமை நீதிபதி ஜனக் டீ சில்வா பின்வருமாறு அறிவித்தார். ' இதற்கு முன்னர், ரிஷாத் ப்தியுதீனின் சாட்சியத்தை ஸ்கைப் ஊடாக பதிவு செய்ய ஆணைக் குழு மறுத்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது அப்படி இல்லை. ரிஷாத் பதியுதீனுடன் தொடர்புபட்ட ஒருவர், ஆணைக் குழுவில் பதிவு செய்யப்படும் சாட்சியங்களை, வெளியே ஊடகங்களுக்கு செவிமடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து பதிவு செய்தமையை மையப்படுத்தி, ஆணைக் குழுவின் சாட்சிப் பதிவுகளின் போது அதனை ஸ்கைப் ஊடாக தொடர்புபட்டு அவதானிக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கையையே நிராகரிக்கப்பட்டது. சாட்சியாளர் ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டின் இரு பக்கத்திலும் உள்ள கூண்டுகளில் இருந்து இருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 அத்துடன் அந்த சிறைக் கூண்டை சுத்தம் செய்யும் நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சிறைச்சாலை அத்தியட்சர் எமக்கு அறிவித்துள்ளார். எமது சாட்சி விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவு செய்யப்பட வேண்டும். எனவே ரிஷாத் பதியுதீன் சாட்சியம் கண்டிப்பாக பெறப்பட வேண்டியது. எனவே ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக அதனை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்க்கின்றோம் ' என அறிவித்தார்.

 இதனையடுத்து ரிஷாத்தின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் பின்வருமாறு கோரிக்கை முன்வைத்தார். ' சாட்சியாளர் ரிஷாத் பதியுதீனுக்கு தமிழ் மொழியில் சாட்சியம் அளிக்க ஒரு மொழி பெயர்ப்பாளர் அவசியம். அவர் இதனை ஆணைக் குழுவில் முன்வைக்க ஆலோசனை வழங்கியுள்ளார். சாட்சியம் அளிப்பதற்கான அறிவித்தல் இன்று காலை ( நேற்று) 9.00 மணிக்கே அவரது கைகளுக்கு கிடைத்ததாக அவர் கூறினார். எனவே அவருக்கு தமிழ் மொழியில் சாட்சியமளிக்க வசதிகளைச் செய்து தருமாரு கோருகின்றேன். ' என்றார். இதன்போது ஆணைக் குழுவின் தலைவர் நீதிபதி ஜனக் டி சில்வா, எமது ஆணைக் குழுவின் மொழி பெயர்ப்பாளர் சுகயீன விடுமுறையில் உள்ளார். ஜனாதிபதி செயலகத்திலிருந்து அவ்வப்போது நாம் அழைக்கும் மொழி பெயர்ப்பாளரும் விடுமுறையில் உள்ளார்.

 எனவே மொழி பெயர்ப்பாளர் ஒருவரை உடனடியாக ஏற்பாடுச் செய்வதில் சிக்கல் உள்ளது. சாட்சியாளர், சிங்களம், ஆங்கிலத்தில் சாட்சியமளிக்கலாம். ஏதேனும் விளங்காத சொற்கள் தொடர்பில் மீள அவர் வினவினால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஆணைக் குழு தயார்.' என அறிவித்தார். இதனையடுத்து ரிஷாத்தின் சட்டத்தரனி ருஷ்தி ஹபீப், ' சிங்கள மொழியில் சாட்சியம் அளிப்பது தொடர்பில் எனக்கு பிரச்சினை இல்லை. எனினும் சாட்சியாளர் தமிழ் மொழியில் சாட்சியமளிப்பதையே விரும்புகின்றார். என தெரிவித்தார்.

 இதனையடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்கும் போதும், ஜனாதிபதி ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் வாக்குமூலமளிக்கும் போதும் சிங்கள மொழியில் அவற்றை வழங்கியதை சுட்டிக்காட்டிய ஆணைக் குழு, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சரலமாக அவர் சிங்களத்தில் கதைப்பதை அவதானித்ததாக சுட்டிக்காட்டி சிங்கள மொழியில் சாட்சியமளிக்குமாறும் அவசியம் ஏற்பட்டால் விளங்காத சொற்கள் தொடர்பில் ஆங்கிலம் அல்லது தமிழில் சட்டத்தரணி ஊடாக உதவவும் என சுட்டிக்காட்டி, அதனை ரிஷாத் பதியுதீனுக்கு அவரது சட்டத்தரனி ஊடாக அறிவித்தது.

 இந் நிலையில், மெகஸின் சிறைச்சாலையின் பிரதான அலுவலக அறையில், சிறை அதிகாரிகளான எம்.யூ.எச். விஜேதிலக, பி.பீ.விக்ரமதிலக ஆகிய சிறை அதிகாரிகள் அருகே இருக்க ஸ்கைப் ஊடாக சாட்சியம் அளிக்க ஆரம்பித்தார். முதலில் ஸ்கைப் ஊடாக சாட்சியம் பெறுதல், அந்த சாட்சியத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் உறுதி செய்ய 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க குற்றச் செயல் ஒன்றினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர் பாதுகாப்பு சட்டத்தின் 31(1)(2) ஆம் அத்தியாயங்களின் கீழ் விடயங்கள் உறுதி செய்யப்பட்டன. அரசின் சிரேஷ்ட சட்டவாதி சஞ்சீவ திஸாநாயக்கவின் ஆரம்ப கேள்விகளுக்கு சிங்கள மொழியில் ரிஷாத் பதியுதீன் பதிலளித்ததுடன், அதனையடுத்து ஸ்கைப்பில் ரிஷாத்திடம் சாட்சியங்களை தொடர ஆணைக் குழு தீர்மனித்தது. அந்த சாட்சியம் நம்பகரமானது என்ற முடிவுக்கு வந்த நிலையிலேயே சாட்சியங்களைப் பதிவு செய்ய தீர்மானித்தது.

 இதன்போது ஆணைக் குழுவில் ரிஷாத் பதியுதீன் தமிழில் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். 'பாராளுமன்ற தெரிவுக் கூழுவில் சாட்சியமளிக்கும் போது எனக்கு அருகே சிங்களம் - தமிழ் தெரிந்த சட்டத்தரனி ஒருவரை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இங்கு அப்படியில்லை. நான் சிங்களத்தில் கூறும் சில விடயங்கள் தெளிவில்லாமல் திரிவுபடலாம். எனது தாய் மொழி தமிழ். அம்மொழியிலேயே கல்வி கற்றேன். தமிழ் மொழி அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழி. எனக்கு தமிழில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் தாருங்கள்.

 எவ்வாறாயினும் அதனை மறுத்து சிங்களத்தில் சாட்சியமளிக்க ஆணைக் குழு வற்புறுத்துமானால் அதன்படி செய்கின்றேன்.' என கூறினார். இதனையடுத்து ஆணைக் குழுவின் நடவடிக்கைகள் முற்பகல், 11.45 மணியளவிலிருந்து பிற்பகல் 1.40 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மதிய போசன இடைவேளையின் பின்னர் தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் ஆணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டு, அவரின் உதவியுடன் சாட்சியம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.





.
அமைச்சராக இருக்கும் பொழுது தமிழை புறக்கணித்த றிசாட், இப்பொழுது தமிழில் சாட்சியளிக்க சந்தர்ப்பம் கோருகின்றார் Reviewed by Author on November 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.