டெல்லி- ஆக்ரா சாலையை விவசாயிகள் முடக்கினார்கள்- பெண்களும் போராட்டத்தில் குவிந்தனர்
டெல்லியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் இன்று 18-வது நாளாக நடந்து வருகிறது.
இதுவரை மத்திய அரசுடன் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கி உள்ளனர்.
அவர்கள் டெல்லியில் ஏற்கனவே 4 முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு இருந்தனர்.
இதன் காரணமாக உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருவதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஆக்ராவில் இருந்து டெல்லி வரும் சாலையை இன்று விவசாயிகள் முற்றுகையிட்டார்கள். ஆயிரக்கணக்கான டிராக்டர்களை அந்த சாலையில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்த சாலை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி வரும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாகும். எனவே டெல்லியில் போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்தது.
நேற்று விவசாயிகள் டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் நாடு முழுவதும் 165 டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் சென்றன.
அடுத்ததாக நாளை விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். இந்த போராட்டம் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது.
இதில் 32 விவசாய சங்கங்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாரதீய விவசாய சங்கத்தின் தலைவர் குர்மீத்சிங் 19-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
முதலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போராட்டத்தில் இப்போது பெண்களும் அதிகளவில் பங்கேற்று வருகிறார்கள். 15-ந் தேதி முதல் இன்னும் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் ஏராளமான விவசாயிகள், வேளாண்மை கடன் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களின் மனைவிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
அவர்கள் டெல்லி எல்லையில் உள்ள திக்ரி என்ற இடத்தில் முற்றுகையில் ஈடுபட இருக்கிறார்கள். பெண்கள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை விவசாய சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே அரியானா விவசாயிகள் மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரியானா விவசாய சங்கங்களை சேர்ந்த பல பிரதிநிதிகள் நேற்று விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து பேசினார்கள்.
அப்போது ஒரு மனுவை அவரிடம் கொடுத்தனர். அதில், ‘‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள், விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கின்றன. எனவே இந்த சட்டங்களை ஆதரிக்கிறோம்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
டெல்லி- ஆக்ரா சாலையை விவசாயிகள் முடக்கினார்கள்- பெண்களும் போராட்டத்தில் குவிந்தனர்
Reviewed by Author
on
December 13, 2020
Rating:
Reviewed by Author
on
December 13, 2020
Rating:


No comments:
Post a Comment