அண்மைய செய்திகள்

recent
-

என்னையும் மறக்கலாமா.....?

ஈழத்திருநாட்டில் சைவசமயத்தையும் தமிழ் மொழியையும் வளர்த்த சான்றோர் வரிசையில் மறக்கமுடியாதவர்.வைகாசி விசாகத்தில்1918ல் பிறந்தவர். 1948 முதல் ஆத்மஜோதி மலரை வெளியிட்டவர். மலையகத்தில் ஆசிரியராக,சமயப்பிரசாரகராக1977வரை அரும்பணியாற்றியவர். ஏழாலையில் பிறந்து நீண்டகாலம் மலையகத் தமிழ்மக்களின் சேவையில் அர்ப்பணிப்புடன் தொண்டாற்றியவர். ஈழத்துச் சித்தர்களின் சரித்திரத்தை நூலாக்கிய பெருமைக்குரியவர். 

நாவலப்பிட்டியில் ஆத்மஜோதி அச்சகத்தை நிறுவி பல சமய நூல்களை வெளியிட்டவர். தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் நிலவிய இந்துப்பாரம்பரியங்களை ஆய்வு செய்து மிகச்சிறந்த நூலை வெளியிட்டவர்.ஆண்டு தோறும் பாதயாத்திரைகளை நடாத்தி சமய ஆர்வத்தை வளர்த்தவர். 1977 இனக்கலவரத்தில் அன்னாரின் அச்சகம், ஆத்மஜோதி நிலையம் தீக்கிரையான சூழலில் யாழ்வந்து தன்பணி தொடர்ந்தவர். பிரமச்சரிய வாழ்வு வாழ்ந்த பெருமகன்.கைதடியில் சைவச்சிறுவர் இல்லத்தை ஆரம்பித்து அதன் வளர்ச்சிக்காக புலம்பெயர் தேசம் சென்று உதவியவர். 

இந்து சமயப் பேரவை என்ற பெயரில் சமய அமைப்பைத் தோற்றுவித்தவர். கனடாவில் சமயப்பணிக்குச் சென்றவேளை அங்கு திடீரெனக் காலமானவர்..பூதவுல் நாட்டின் அசாதாரண சூழலால் கனடாவிலேயே தகனம் செய்யப்பட்டது. என் செய்வது. அவரை பலர் மறந்துவிட்டோம். மகத்தான மனிதன். என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர், பெரியார் ஆறு திருமுருகன் (Aaruthirumurugan Aaruthirumurugan) அவர்கள் ஆத்மஜோதி முத்தையா அவர்கள் பற்றிய குறிப்பொன்றை தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அதனை படித்தவுடன் மலையகத்தில் வாழ்ந்த நினைவுகள் என்னுள் எழுந்தன.

 என் தந்தை பண்டிதர் கா.செ நடராஜா ஆசிரியரும், எனது தாய் பரமேஸ்வரி நடராஜா ஆசிரியரும், ஆத்மஜோதி நா. முத்தையாவுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தவர்கள். ஆத்மஜோதி மலரில் என் தந்தையின் ஆக்கங்கள் வெளிவந்ததாக தந்தையார் சென்னவை ஞாபகங்களில் வந்தது. இவரது நாவலப்பிட்டி வீட்டிற்கு நாம் பலமுறை சென்று இருக்கிறோம். அவரும் எமது தலவாக்கல வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். அவரது கூட்டுப் பிரார்த்தனைகளில் நாம் பங்குகொண்டு இருக்கிறோம்.

 அப்போது நான் 4ஆம் வகுப்பு படித்த சிறுவனாக இருந்தாலும் அவரது சாந்தமான முகமும், அமைதியான பேச்சும் மறக்க முடியாதவை. அவர் மலையகத்தில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய பின்பும் நாம் அவரை சந்தித்த ஞாபகம் இருக்கிறது. ஆத்மஜோதி இதழில் 1960.01.14ல் வெளிவந்த என் தந்தையின் கட்டுரை ஒன்றை சகோதரி கார்த்தியாயினி அனுப்பி வைத்திருந்தார். 

 அது மட்டும் அன்றி ஆத்மஜோதி இதழில் வந்த கட்டுரைகளைத் தொகுத்தே “இளங்கோவின் கனவு” என்ற நூலை தந்தையார் வெளியிட்டதாகவும் கூறினார். இந்த நூல் குறிப்பிட்ட காலம் வரை, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட பாடவிதானத்தில் சேர்க்கப்பட்டு இருந்தது. (தற்போதும் தொடர்கிறதா என தெரியவில்லை) ஆத்மஜோதி இதழில் 1960.01.14ல் நான் பிறப்பதற்கு பல வருடங்கள் முன்னதாக வெளிவந்த கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.










என்னையும் மறக்கலாமா.....? Reviewed by Author on February 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.