அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் மத்தியில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி முன்னெடுக்கப்பட்டுவந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தின் 17வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) அதனை நிறைவுறுத்தும் வகையிலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிகோரிய வகையிலும் இந்த போராட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது. 

 இந்த போராட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் குறித்த போராட்டத்தில் ஈடுபடுவோர் என்ற ரீதியில் 25பேருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. குறிப்பாக காந்தி பூங்கா,மாமாங்கம் ஆகிய பகுதிகளிலில் போராட்டம் நடாத்துதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் வடகிழக்கு ஏற்பாட்டாளர்களான வேலன் சுவாமி,எஸ்.சிவயோகநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலருக்கு நேற்று தடையுத்தரவுகள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டதுடன் மாமாங்கேஸ்வரர் ஆலய மதில்களிலும் தடையுத்தரவுகள் ஒட்டப்பட்டிருந்தன. 

 இன்று காலை மட்டக்களப்பு நகரில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் தாக்குதல் மேற்கொள்ளும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் கலகமடக்கும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டு மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக அச்சநிலையேற்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் நீதிமன்ற தடையுத்தரவுகள் காரணமாக போராட்டம் நடைபெறும் இடம்மாற்றப்பட்டது.மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குள் தடையுத்தரவு காரணமாக அவை மாற்றப்பட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டது.

 சித்தாண்டி,மாவடிவேம்பு மருங்ககையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து பேரணியாக சித்தாண்டி சந்திப்பிள்ளையார் ஆலயம் வரையில் பேரணியாக வந்தனர். தமிழர் தாயகத்தினை அங்கீகரிக்கவும் இந்திய இராணுவத்தினை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதி உண்ணாவிரதம் ஆரம்பித்த இன்றைய தினத்தில் தமிழர்களுக்கான நீதிகோரிய இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

 இதன்போது தமிழர் தாயகப்பகுதியை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும்,அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தவேண்டும்,தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் ஊடாக தீர்வினை வழங்கவேண்டும்,ஐநாவில் கொண்டுவரப்பட்ட 46இன் கீழ் ஒன்று தீர்மானத்தினை நிகாரிப்போம்,கடத்தப்பட்டுகாணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும்,மேய்ச்சல் தரை நிலத்தினை மீட்டுத்தாருங்கள்,எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் உட்பட பல்வேறு கோசங்கள் இந்த பேரணியின்போது எழுப்பப்பட்டன. 

 இந்த பேரணி ஆரம்பமான நிலையில் அங்குவந்த ஏறாவூர் பொலிஸார் தடையுத்தரவு உள்ளதாக கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு கோரிய நிலையிலும் அவற்றினை கருத்தில்கொள்ளாமல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போலியான தடையுத்தரவினை காட்டி பேரணியை தடுக்கமுனைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களையும் பொலிஸார் வீடியோ புகைப்படம் எடுத்தபோது அதற்கு எதிரான கோசங்களையும் பேரணியில் சென்றோர் எழுப்பினர். தடைகளை தாண்டி முன்னெடுக்கப்பட்ட பேரணியானது சித்தாண்டி சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றதும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு ஐநா மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைக்கும் மனுவொன்றும் வாசிக்கப்பட்டது. 

 இந்த போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் வடகிழக்கு ஏற்பாட்டாளர்களான வேலன் சுவாமி,எஸ்.சிவயோகநாதன்,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,முன்னாள் ந் உறுப்பினர்களான சீ.யேகேஸ்வரன்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் மற்றும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் இறுதியில் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு சென்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தினர் அங்கு சமாதியில் ஈகச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.


சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்! Reviewed by Author on March 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.