வட்டக்கச்சி சம்பவம்: பொலிஸாரின் தாக்குதலை எதிர்த்தும் நீதி கோரியும் நூற்றுக் கணக்கானோர் பேரணி!
கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லையென்றும், பொலிஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவு இயந்திரத்தில் வருகை தந்த ஆர்ப்பாட்டக் குழுவினர், கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து மாவட்டச் செயலகம் வரை ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர். தமது பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துமாறும் இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகனுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்துரையாடியதுடன், பொலிஸ்மா அதிபர், பிரிதிப் பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், வடக்கு மாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டோருக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.
இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மக்கள், தர்மபுரம் பொலிஸார் மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன்னைவைத்துள்ளனர்.
அத்துடன், கடந்த 10 ஆம் திகதி வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தன் (வயது-31) சமூக செயற்பாட்டாளர் எனவும் இரண்டு குழந்தைகளின் தந்தையான அவர் கிராமத்தின் நலன்களில் அக்கறையுள்ள நற்பிரஜை என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவருடைய மரணத்திற்கு காரணம், கிராமத்தில் இடம்பெறுகின்ற கஞ்சா, கசிப்பு, சட்டவிரோத மணல் கடத்தல் ஆகியவற்றின் விளைவே என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வட்டக்கச்சி சம்பவம்: பொலிஸாரின் தாக்குதலை எதிர்த்தும் நீதி கோரியும் நூற்றுக் கணக்கானோர் பேரணி!
Reviewed by Author
on
March 17, 2021
Rating:

No comments:
Post a Comment