அண்மைய செய்திகள்

recent
-

சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம்- மறைந்த பேராயருக்கு தமிழ் அரசியல் கைதிகள் இரங்கல்

தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறைச்சாலைகளினதும் வாசல்களை தரிசித்து கைதிகளின் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டி ஒரு அன்னையை போல ஆற்றுப்படுத்தி ஆசிர்வதித்த பேராயர் ஆண்டகையின் ஆத்மா பரம பதமடைய சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோமென தமிழ் அரசியல் கைதிகள் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர். 

 மன்னார் ஆயர் (ஓய்வு ) அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கான இரங்கல் செய்தியை சிறைகளுக்குள்ளிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தமது பெற்றோர், உறவினர்கள் ஊடாக குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்களது இரங்கல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உண்மையான இயேசுவின் சீடராக வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் வாழ்ந்து காட்டியவர் முன்னாள் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை. பொதுப் பார்வைக்குக் காட்சிப்படுத்தும் எந்தச் செயல்களிலும் சாட்சியம் இருப்பதில்லை. விளம்பரம் இல்லா நற்காரியங்களே ஆண்டவன் சன்னிதானத்தில் என்றும் விலைமதிப்பானவை என்பதற் கொப்ப, சிறைக்கொட்டடிகளில் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் அத்தியாவசிய விடயங்களில் அழையா விருந்தாளியாக தன்முனைப்பு கொண்டு பலநற்காரியங்களை செய்திருந்தார் ஆயர். 

மனித நேயமும். பிறரன்பும் மிகுந்த பெருந்தகையான இவர் தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறைச்சாலைகளினதும் வாசல்களை தரிசித்து கைதிகளின் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டி ஒரு அன்னையை போல ஆற்றுப்படுத்தி ஆசிர் வதித்து வந்திருந்தார். இவ்வாறு சொற்கோர்வைகளுக்குள் மாத்திரம் வரையறுத்துவிட முடியாத பரந்து விரிந்த செயலெல்லையை கொண்டிருந்த அதி வணக்கத்துக்குரியவரின் அர்ப்பணிப்புக்களில் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளமையானது பெரும் வருத்தத்திற்குரியதே. 

 என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று அலுத்தோயாது மக்கள் பணி செய்து வந்த மரியாதைக்குரிய மகானின் பேரிழப்பால் துயரமடைந்திருக்கின்ற அத்தனை மனித இதயங்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம்- மறைந்த பேராயருக்கு தமிழ் அரசியல் கைதிகள் இரங்கல் Reviewed by Author on April 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.