அண்மைய செய்திகள்

recent
-

விவசாயிகளுக்கு பசளை, கிருமி நாசினிப் பொருட்களை துரித கதியிலும், கட்டுப்பாட்டு விலைக்கு வழங்க கோரிக்கை.

2021ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை மற்றும் உப உணவு செய்கைக்கான பசளை, கிருமி நாசினிகளின் தட்டுப்பாடுகளை நீக்கவும், விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விவசாய அமைச்சருக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவசர கடிதங்களை இன்று சனிக்கிழமை (5) அனுப்பியுள்ளார்.

 குறித்த கடிதங்களில் மேலும் குறிப்பிடப்படுகையில்,,, நெற் பயிர்ச் செய்கையையும், உப உணவு தோட்டப் பயிர்ச் செய்கையையும் தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வரும் வன்னி மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் கால நிலை, இயற்கை இடர்களுக்கு ஒரு புறம் முகம் கொடுத்துக் கொண்டு வரும் நிலையில் கிருமிநாசினிகள், உரம் போன்ற விவசாய உள்ளீடுகள் குறித்த காலத்துக்கு கிடைக்கப் பெறாமையால் பல்வேறு சிரமங்களுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.

 2021ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையும், உப உணவு தோட்ட செய்கையும் இக்கொடிய கோவிட் தொற்றுக் காலத்திலும் வன்னி மக்கள் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும், வாழ்வாதாரத்துக்காகவும் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த கால யுத்தத்தினால் மிக மோசமான பாதிப்புக்களை சந்தித்த மாவட்டம் வன்னி என்பது உங்களுக்கு தெரியாததல்ல. இம் மாவட்ட மக்கள் அனைத்து வசதிகளுடனும், வளங்களுடனும் வாழ்ந்தவர்கள். இன்று கையறு நிலையில் வாழும் இந்த மக்களுக்கு இந்த விவசாயம் மட்டுமே ஓரளவுக்கேனும் கை கொடுக்கின்ற நிலை காணப்படுகின்றது. 

 ஆனாலும் உரிய நேரத்திலும், காலத்திலும் விவசாய உள்ளீட்டுப் பொருட்கள் கிடைக்காமையினால் விவசாயிகளின் தாங்கிக் கொள்ள முடியாத சுமைகள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. விவசாய உள்ளீடுகளின் தட்டுப்பாடுகள் ஒருபுறமிருக்க விலை அதிகரிப்பினாலும் அல்லற்படுகின்றனர். இன்று 1500ரூபா பெறுமதியான ஒரு அந்தர் உரம் 4000ரூபா தொடக்கம் 4500ரூபா வரை வெளிச்சந்தையில் விற்கப்படுகின்றது. கிருமிநாசினிகள், மருந்துப் பொருட்களும் 35 தொடக்கம் 40 சதவீதம் வரையான விலை அதிகரிப்பு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

 சேதன, இரசாயன பசளைகளுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பிற்பாடும் இதே நிலைமை தொடருவதை காணக்கூடியதாக இருப்பது கவலை தருகின்றது. பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருக்கின்ற விவசாயிகள் பலன் தரக்கூடிய அறுவடையை செய்ய முடியுமா? என அச்சம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் மொத்த, சில்லறை வியாபாரிகள், இடைத்தரகர்கள் அதிக இலாபமீட்டுவதையும், விவசாயிகள் பாதிக்கப்படுவதையும் ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசின் மானிய அடிப்படையிலான உரங்கள் கூட தற்போதைய பயணத் தடை உட்பட்ட காரணங்களால் சீராக கிடைக்கப் பெறுவதில்லை. 

 வன்னிமாவட்டத்தில் ஐம்பது சதவீத மானிய உரங்கள் கூட கமநலத்திணைக்களத்தினால் இதுவரை வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே இவை சம்பந்தமாக விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் கட்டுப்பாட்டு விலையில் பசளை, கிருமி நாசினிகளை பெற்றுக்கொள்ளவும் சிரமங்கள் இன்றி உரிய காலத்தில் துரித கதியில் இவற்றை பெற்றுக் கொடுக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவன செய்யுமாறும் காலதாமதங்களுக்கும், விலை உயர்வுக்கும் காரணங்களை கண்டறிந்து தீர்வு காணுமாறும் தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


விவசாயிகளுக்கு பசளை, கிருமி நாசினிப் பொருட்களை துரித கதியிலும், கட்டுப்பாட்டு விலைக்கு வழங்க கோரிக்கை. Reviewed by Author on June 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.