ஆடி அமாவாசை
அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து தானம் கொடுப்பார்கள். காக்கைக்கு உணவு கொடுப்பார்கள். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்கள்தான் சிறப்பானது என்று புனித தீர்த்தங்களில் நீராடி படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டு இன்றைய தினம் 8ஆம் தேதி ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் புனித நீர் நிலைகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதால் வீட்டிலேயே முன்னோர்களுக்கு படையல் போட்டு வணங்கலாம். அவர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.
நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். தர்ப்பணம் செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்பட்டு அது பித்ரு தோஷமாக மாறி சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது. ஆகவே தவறாது அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
புனிதமான தர்ப்பணங்களை செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம்.
இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.
அமாவாசை நாளில் இறந்த முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணமும், அவர்களை நினைத்து செய்யும் நல்ல காரியங்களாலும் பலன்கள் அதிகரிக்கும். முன்னோர்களின் ஆசியால் இதுநாள்வரை தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென நடைபெறும். நாம் கொடுக்கும் தர்ப்பணத்தில் மகிழ்ச்சியடையும் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதிப்பார்கள். இதனால் தரித்திரம் விலகும் ஐஸ்வர்யம் பெருகும்.
சனிக்கிழமை தினத்திலும் ஞாயிறுக்கிழமை தினத்திலும் அமாவாசை வருவது விஷேசமானது. அன்றைய தினம் சனிபகவானையும் வழிபடலாம். தந்தைக்காரகர் சூரியனையும் வழிபடலாம். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலிட்டு இயலாதவர்களுக்கு தானம் கொடுக்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மறக்காமல் இன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.
ஆடி அமாவாசை
Reviewed by Author
on
August 08, 2021
Rating:
Reviewed by Author
on
August 08, 2021
Rating:


No comments:
Post a Comment