தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 48 மணிநேரம் ரவுடிகள் வேட்டையில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து நேற்று மாலை 4 மணி முதல் ரவுடிகள் வேட்டை நடைபெற்று வருகிறது.
சென்னையிலும் ரவுடிகள் வேட்டை நேற்று மாலையில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையை போன்று தமிழகத்தில் உள்ள மற்ற மாநகர பகுதிகளிலும், மாவட்டங்களிலும் விடிய விடிய ரவுடிகள் வேட்டை நடைபெற்றது. பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து ரவுடிகளையும் வேட்டையாடி கைது செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக களம் இறங்கினார்கள்.
இதன்படி கிராமப்புறங்கள் முதல் நகரப்பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் இடைவிடாமல் சோதனை நடத்தப்பட்டது.
தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை 4 மணிமுதல் நடத்தப்பட்டு வரும் சோதனையில் நூற்றுக்கணக்கான ரவுடிகள், போலீஸ் பிடியில் சிக்கினர். இன்று காலை வரையில் 560 ரவுடிகள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடி வேட்டை தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திர பாபு, மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து மாநிலம் முழுவதும் 48 மணிநேர ரவுடிகள் வேட்டையை தொடங்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ஏ, பி, சி, டி என 4 வகையாக பிரிக்கப்பட்ட ரவுடிகளை பட்டியல் எடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக ஏ- பிளஸ் கேட்டகிரியில் இருக்கும் ரவுடிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுபோன்ற ரவுடிகளை பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு, அதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று காலை வரையில் 560 குற்றவாளிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
டிஜிபி சைலேந்திரபாபு
இவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட 149 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பழைய குற்றவாளிகள், கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள் உள்பட அனைத்து விதமான ரவுடிகளையும் பிடித்து சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணிவரையில் 48 மணிநேர ரவுடிகள் வேட்டை நடைபெறும். இந்த நடவடிக்கையின்போது தலைமறைவாக இருக்கும் அனைத்து ரவுடிகளையும் பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் முக்கிய குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசில் சிக்கியுள்ள 500-க்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணைக்கு பிறகு அவர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ரவுடிகள் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும். இதில் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறினார்.
தமிழக காவல் துறையின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர். போலீசுக்கு பயந்து தலைமறைவாக உள்ள ரவுடிகளும் காவல் நிலையத்தில் சரணடைய முடிவு செய்துள்ளனர். இதுபோன்று சரணடையும் ரவுடிகளையும் சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக போலீசாரின் இந்த ரவுடிகள் வேட்டை பொதுமக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி
Reviewed by Author
on
September 24, 2021
Rating:
Reviewed by Author
on
September 24, 2021
Rating:



No comments:
Post a Comment