மன்னாரில் மின் தகன நிலையம் அமைக்க நடவடிக்கைகள் துரித கதியில்- அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல்.
மன்னார் நகர சபை மின் தகன நிலையத்திற்கான கட்டிட செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக எம்மிடம் கூறியுள்ளனர்.
மின் தகன நிலையத்திற்கான இயந்திர தொகுதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிதி நாடளாவிய ரீதியில் கொடையாளர்களிடம் இருந்து தற்போது வரை 21 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. குறித்த நிதி உதவிகள் ஊடாக மிகவும் விரைவாக மின் தகன நிலையத்தை மன்னாரில் அமைக்க உள்ளோம்.
மேலும் அதிகளவான தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் வழங்கப்படுவதின் காரணமாக மன்னாரில் 'கொரோனா' தொற்று மற்றும் மரணங்கள் குறைவடைந்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 255 நபர்களை தவிர ஏனைய அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று 30 வயது தொடக்கம் 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு , 20 வயது தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எமது சுகாதார துறையினரின் அர்ப்பணிப்பான சேவையினால் தற்போது மன்னார் மாவட்டத்தில் மிக குறைவான கொரோனா நோயாளர்கள் மற்றும் தொற்றினால் மரணிப்பவர் வீதமும் குறைந்து காணப்படுகிறது. என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
-அதே வேளை அரசாங்கத்தின் சுபிட்சத்தை நோக்கிய வேலைத்திட்டம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
'அரசாங்கத்தின் சுபிட்சத்தை நோக்கிய' என்ற இலக்கின் ஒரு கட்டமாக 'நாட்டுக்கும் சுமை இல்லாத உழைக்கும் தலைமுறையை உருவாக்குதல்' என்னும் தொனியில் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் அக்டோபர் 4 திகதியில் இருந்து 10 ஆம் திகதி வரை தொழில் சந்தை வாரம் அமுல் படுத்தி உள்ளனர்.
இந்த நிகழ்வை முன்னிட்டு மாணவர்களின் ஆற்றல் , திறன்களை அதிகரிக்கும் நோக்கில் கட்டுரை, பேச்சு , கவிதை போன்ற போட்டிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பாடசாலைகள் நடை பெறாத நிலையிலும் எங்களுடைய மாவட்டத்தில் இருந்து இணையம் மூலம் நடைபெறும் இந்த போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இருப்பது பாராட்டக் கூடியதாக இருக்கிறது.
அதேவேளை அக்டோபர் 8 ஆம் திகதி இணையம் மூலம் தொழிற் சந்தை வாரம் நடைபெற இருக்கிறது.
அந்த தொழில் சந்தையின் மூலம் பல்வேறுபட்ட தொழில்கள் வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதனால் படிப்பை நிறைவு செய்து வேலைவாய்ப்பினை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகள் இதில் பங்கு பற்றி பயனடைந்து கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களை மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் மனித வலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் மின் தகன நிலையம் அமைக்க நடவடிக்கைகள் துரித கதியில்- அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல்.
Reviewed by Author
on
September 22, 2021
Rating:
Reviewed by Author
on
September 22, 2021
Rating:



No comments:
Post a Comment