யாழ். பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனா தெற்று!
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த அனைத்து வருடத்திலும் இசைக் கருவியைப் பிரதான பாடமாகப் பயிலும் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தால் வலிந்து அழைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதனால், மலையகம் உட்பட நாட்டின் வெவ்வேறு பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்து விரிவுரைகளில் பங்குகொண்டிருக்கின்றனர். அவர்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் துணைவேந்தர் ஊடாக சுகாதாரத் தரப்பினருக்குத் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
குறித்த மாணவர்கள் இருவரையும் பொறுப்பேற்பதற்காகச் சுகாதாரத் தரப்பினர் மாணவர்கள் இருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்ட இணுவில் பகுதிக்குச் சென்றிருக்கின்றனர். இருந்தபோதிலும் மாணவர்கள் இருவரும் சுகாதாரத் தரப்பினருடன் நோயாளர் காவு வண்டியில் செல்வதற்கு மறுப்புத் தெரிவித்தனர் எனவும், தம்மை யார் அழைத்தாலும் செல்ல வேண்டாம் என்று தமது துறைத் தலைவர் தமக்கு அறிவுறுத்தினார் எனவும் சுகாதாரத் தரப்பினருக்கு மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அதன் பின்னர் மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இசைத்துறை விரிவுரையாளர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களின் பி.சி.ஆர். முடிவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ளன. அவற்றின் அடிப்படையில், விரிவுரையாளர்கள் ஐவர் மற்றும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான இரு மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய நிலையில் தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
யாழ். பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனா தெற்று!
Reviewed by Author
on
October 04, 2021
Rating:

No comments:
Post a Comment