அண்மைய செய்திகள்

recent
-

அனர்த்தங்களால் நாட்டில் 26 பேர் பலி; மீண்டுமொரு காற்றழுத்த தாழமுக்கம் உருவாகக்கூடும்

மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,30,000 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்தங்களால் நாட்டில் 26 பேர் பலியாகியுள்ளனர். நாத்தாண்டி தும்மோதரவிற்கு இடைப்பட்ட பகுதியில் ஐந்தாவது நாளாகவும் வௌ்ளம் தேங்கியிருந்தது. இதன் காரணமாக நாத்தாண்டி, தும்மோதர ஊடாக கொழும்பு வீதியின் போக்குவரத்து பாரியளவில் தடைப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். 

 மண்சரிவு அபாயம் காரணமாக முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுகண்ணாவை பகுதி இன்னும் திறக்கப்படவில்லை. தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் ஆய்வு நடத்திய பின்னர் வீதியை திறப்பது குறித்து தீர்மானிப்பதாக கேகாலை மாவட்டத்தின் உதவி பணிப்பாளர் அனுஷ்க சமில கூறினார். இதனிடையே, பஹல கடுகண்ணாவை பகுதியில் அமைந்திருந்த 30-க்கு மேற்பட்ட கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதாக கேகாலை மாவட்ட செயலாளரான மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.

 மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் (10) இரவு கொழும்பு – கண்டி வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி மூடப்பட்டது. இதனிடையே, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

 தெற்கு அந்தமான் கடற்பிராந்தியத்தை அண்மித்து புதிய குறைந்த காற்றழுத்த தாழமுக்க வலயம் நாளை (13) உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இது குறித்து மீனவர்கள் மற்றும் கடற்படையினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய வானிலையினால் மாத்தளை – உக்குவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னஸ்கிரிய, புதுக்காடு உள்ளிட்ட மூன்று தோட்டங்களுக்கு செல்லும் பிரதான வீதியும் பாலமும் சேதமடைந்துள்ளது. இந்த வீதியினூடாக செல்லும் ஒரேயொரு பொதுப்போக்குவரத்து பேருந்தும் தற்போது சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 இதனிடையே, கிழக்கில் திருகோணமலை – மூதூர், கட்டைப்பறிச்சான் இரால் பாலத்தை மேவி வௌ்ளம் நிறைந்துள்ளதால், குறித்த வீதியூடாக பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கணேசபுரம், அம்மன் நகர் பகுதிகளிலிருந்து கட்டைப்பறிச்சான் விபுலானந்தா வித்தியாலயத்திற்கு செல்கின்ற மாணவர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மூதூரிலுள்ள விளைநிலங்களும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக முந்தல் பிரதேச செயலகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 முந்தல் பெருக்குவட்டான் கிராம சேவகர் பிரிவிலுள்ள கருவாமடு கிராமமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறித்த கிராமத்தை சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் பெருக்குவட்டான் புனித பேதுருவானவர் தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொத்தாந்தீவு கிராமசேவகர் பிரிவிலுள்ள உபைதான் கிராமத்தில் நிறைந்த வௌ்ளம் தற்போது வடிந்தோடி வரும் நிலையில், நீர்ப்பிரவாகத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தமது வீடுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழையுடனான வானிலையினால் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு, நரக்கள்ளி, நுரைச்சோலை, திகலி பகுதிகளில் மேற்கொண்டு வரும் ஆயிரம் ஏக்கருக்கு மேலான பயிர்ச்செய்கை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அனர்த்தங்களால் நாட்டில் 26 பேர் பலி; மீண்டுமொரு காற்றழுத்த தாழமுக்கம் உருவாகக்கூடும் Reviewed by Author on November 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.