அண்மைய செய்திகள்

recent
-

வட பகுதி மீனவர்கள் என்ற வகையில் இந்திய தமிழக மீனவர்களுடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் கலந்து கொள்ளப் போவதில்லை-என்.எம்.ஆலம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக எங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு,எமது முயற்சிகள் வெற்றியளிக்கப்படாமல் இருக்கின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை (30) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக எங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு, வெற்றி அளிக்கப்படாமல் இருக்கின்றது. 

 நாங்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய போதும் இன்னும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறைவடையவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் ஊடாக இதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்த போதும் உரிய கடற்றொழில் அமைச்சரினால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டு வருடங்கள் கடந்தும் அதற்கான எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. அண்மையில் கச்சதீவில் இந்திய மீனவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தி இருக்கிறார்கள். அந்தக் கலந்துரையாடலில் உரிய விடயங்கள் எதுவும் பேசப்படவில்லை. 

 ஆனால் இந்திய தரப்பால் இலங்கை மீனவர்களுடன் பேசுவோம். பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வோம் என்று அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. வட பகுதி மீனவர்கள் என்ற வகையில் இந்திய தமிழக மீனவர்களுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற செய்தியை நாங்கள் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். மேலும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக நீண்ட வரிசையில் நின்று எரிபொருள்களை மீனவர்களும் பொது மக்களும் பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இந்த நெருக்கடி நிலை ஏன் ஏற்பட்டது என்று எங்களுக்கு விளங்கவில்லை. 

குறிப்பாக வட பகுதிக்கு வருகின்ற எரிபொருட்களை சமமாக பங்கிட்டு ஒரு படகுக்கு இவ்வளவுதான் என்று முறையாக செயல்படும் போது இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும். இது தொடர்பாக நாங்கள் செவ்வாய்க்கிழமை (29) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மாவட்ட செயலாளரிடம் தெரிவித்திருந்தோம். மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் 33 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கண்ணாடி இழை படகுகள் 3500 இருக்கிறது. ஒரு படகுக்கு கிட்டத்தட்ட 30 லிட்டர் எரிபொருள் தேவை என்று பார்த்தாலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது. எனவே வருகின்ற எரிபொருட்களை சமமாக பங்கிட்டு வழங்கியிருந்தால் மீனவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்க வேண்டிய தேவை இருக்காது. மீனவர்களுக்கான எரிபொருட்களை மீன்பிடி சங்கங்களுக்கு வழங்கி அந்த சங்கங்களின் ஊடாக அங்கத்தவர்களுக்கு வழங்குவது இலகுவாக இருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலங்களில் நாங்கள் இதையே மேற்கொண்டோம்.

 பொதுமக்கள் தங்களுக்கு தேவையான எரிபொருளை எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் ஊடாக பூர்த்தி செய்து கொள்வார்கள் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மாவட்ட கடற்தொழில் உதவி ஆணையாளர் போன்றவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கின்றோம் எனவே மாவட்டத்தில் இயங்கும் எரிபொருள் வழங்கும் நிலையங்கள் மீனவர்களுக்கான எரிபொருட்களை மீனவ சங்கங்களுக்கு பகிர்ந்தளித்து மீனவர்களின் தொழிலுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



வட பகுதி மீனவர்கள் என்ற வகையில் இந்திய தமிழக மீனவர்களுடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் கலந்து கொள்ளப் போவதில்லை-என்.எம்.ஆலம். Reviewed by Author on March 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.