அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போயிருந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (14) மதியம் மீட்கப்பட்டது என கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். 

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூவரில் நேற்றைய தினம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இருவரின் சடலம் மீட்கப்படாத நிலையில் நேற்றைய தினம் பெய்த மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது. இன்றைய தினம் (14) மூன்றாவது நாளாகவும் காலை ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மதியம் வேளையில் குறித்த யுவதி மற்றும் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) என தெரியவந்துள்ளது.

 கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதே இவர்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் சடலங்கள் கொத்மலை நீர்தேக்கத்தின் மின் உற்பத்திக்காக நீரை வழங்கும் நீர் தாங்கியிலிருந்தே மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் மீதான மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியாவுக்கு 12.04.2022 அன்று சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பகுதியான இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு இளைஞர், யுவதிகள் குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர். இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றுள்ளனர். ‘செல்பி’களை எடுத்தும் மகிழ்ந்துள்ளனர்.

 எனினும், அவர்களின் சந்தோசம் நீடிக்கவில்லை. திடீரென நீர்வீழ்ச்சி – ஆற்றுப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்ததால் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கூக்குரல் எழுப்ப, அப்பகுதியில் இருந்து சிலர் வந்துள்ளனர். அதற்குள் 4 யுவதிகளை அவர்களுடன் சென்ற இளைஞர் காப்பாற்றி கரைசேர்த்துள்ளார். ஏனைய இரு யுவதிகளையும் காப்பாற்ற முற்பட்டவேளையிலேயே மூவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.


காணாமல் போயிருந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு Reviewed by Author on April 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.