அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் வீடுகளால் 28 இலட்சத்தை இழந்து நிற்கும் மன்னார் பிரேதச சபை

மன்னார் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 6 கிராமங்களை சேர்ந்த 786 வீடுகள் மன்னார் பிரதேச சபையில் உரிய அனுமதிகள் இன்றி கட்டப்பட்டமையினால் மன்னார் பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய 2,825,000 ரூபா வருமானம் 8 வருடங்களுக்கு மேலாக கிடைக்க பெறாமல் உள்ளது உரிய அனுமதிகள் இல்லை என்ற அடிப்படையில் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் இடித்தழித்தல் முறைக்கு அமைய குறித்த கட்டிடங்களை இடித்தழிக்க கூடிய அதிகாரம் பிரதேச சபைக்கு காணப்படுகின்ற நிலையில் 786 வீடுகள் என்ற அடிப்படையில் அவற்றை இடித்தழித்தல் என்பது முரண்பாடுகளை தோற்றம்பெற வைக்ககூடிய ஒன்றாக கருதப்படுகின்றது 

 இந்த நிலையில் வருமானம் இன்றி காணப்படுகின்ற மன்னார் பிரதேச சபை குறித்த அனுமதியற்ற கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க முடியாத நிலையிலும் அதே நேரம் அனுமதி அற்ற வீடுகளை இடித்தழிக்க முடியாத நிலையிலும் காணப்படுகின்றது மன்னார் மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளின் செயற்பாட்டுக்கு அமைவாக நிரல்படுத்தும் போது மக்கள் தொகையின் அடிப்படையிலும் மக்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டிய சேவையின் அடிப்படையிலும் ஏனைய மூன்று பிரதேச சபைகளையும் விடவும் மன்னார் பிரதேச சபையானது அதிக அளவு பணிச்சுமையை கொண்டுள்ளது 

 மன்னார் மாவட்டத்தில் காணப்படும் முசலி,நானாட்டான்,மாந்தை மேற்கு பிரதேச சபைகளை விடவும் மன்னார் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு மக்கள் தொகை காணப்படுவதுடன் வளங்கள் மற்றும் நிலப்பகுதி மிகவும் குறைவாக காணப்படுகின்றமை மன்னார் பிரதேச செயலகத்தின் வினைத்திறனான செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளது மன்னார் தீவக பகுதிக்குள் உள்ள தாழ்வுபாடு,பேசாலை,தலைமன்னார் போன்ற பிரதான கிராமங்களை உள்ளடக்கியுள்ள மன்னார் பிரதேச சபையானது தீவகத்திற்கு வெளியில் உயிலங்குளம் மற்றும் திருக்கேதீஸ்வரம் வரை நீண்டு செல்கின்றது

 இவ்வாறான எல்லைக்குள் அமைந்துள்ள மன்னார் பிரதேச சபையின் கீழ் வருமானம் ஈட்டும் வழிகள் மிக சொற்பமாகவே காணப்படுகின்றது குறிப்பாக பிரதேச சபைக்கு சொந்தமான கடைகள் ஊடாக கிடைக்கப்பெறும் குத்தகை பணம், இசைவு சான்றிதல் வழங்குதல்,வீட்டுக்கான கட்ட அனுமதி மற்றும் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனங்களை வாடகை செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கின்ற வருமானத்தை கொண்டே பிரதேச சபையை கொண்டு செல்ல கூடிய வருமானம் கிடைக்க பெறுகின்றது இவ்வாறான பின்னனியில் மன்னார் பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய இருபத்தியெட்டு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபா வரிப்பணம் முறையான திட்டமிடல் மற்றும் அனுமதி இன்றி கட்டப்பட்ட 06 குடியிருப்பினால் தொடர்சியாக 08 வருடங்களுக்கு மேலாக இழக்கப்பட்டு வருவதுடன் அந்த நிதியை பெற்று கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றமை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக அவதானிக்கப்பட்டுள்ளது

 மன்னார் பிரதேச சபையில் 2019 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாகாண கணக்காய்வு அறிக்கையின் ஊடாக குறித்த வருமானம் இழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் வகையில் மன்னார் தலைமன்னார் பகுதியில் றிசாட்சிற்றி என்ற பெயரில் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணிசீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகள் பிரதேச சபையின் எந்த ஒரு அனுமதியும் பெறப்படாமலும் பிரதேச சபை நியதிசட்டத்திற்கு அமைவாக பிரிக்கப்படாமலும் 400 பேருக்கு பிரிக்கப்பட்டு 400 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது 

இவ்வாறு அனுமதி இன்றி வீடுகள் கட்டப்பட்டமையினால் மன்னார் பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் 1416000.00 ரூபா வருமான இதுவரை கிடைக்க பெறவில்லை அது மாத்திரம் இல்லாமல் மன்னார் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பெரிய கரிசல் 100 வீட்டுதிட்டம், பெரிய கரிசல் 50 வீட்டுதிட்டம், பேசாலை 25 வீட்டு திட்டம் ,சயிட்சிட்டி வீட்டு திட்டம் ஆகிய வீட்டு திட்டங்களும் அதில் நிர்மாணிக்கப்பட்ட 295 வீடுகளும் பிரதேச சபையின் உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டமையினால் 1044300.00 ரூபா பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் கிடைக்க பெறவில்லை இதே போன்று 2018,2019 ஆண்டு காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட PSDG வீட்டு திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட 21 வீடுகளுக்கு உரிய அனுமதி இன்றி கட்டுமானம் மேற்கொண்டமையினால் மன்னார் பிரதேச சபைக்கு 74340.00 ரூபா வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது அத்துடன் 76 கட்டடங்களுக்கு இசைவுச்சான்றிதல் வழங்கப்படமையினால் 42560 ரூபா வருமானத்தினை மன்னார் பிரதேச சபை இழந்துள்ளது 

 சாதாரணமாக ஒரு வீடு அமைக்கப்படும் போது உரிய ஆவணங்களான காணி உறுதி ,காணிக்கான வரைபடம், மற்றும் அமைக்கப்படும் வீட்டின் வரைபடம் என்பன சமர்பிக்கப்பட்டு பிரதேச சபைக்கு வீடு ஒன்றுக்கு 3540 ரூபா செலுத்திய பின்னரே வீடுகள் அமைக்கப்பட வேண்டும் அதுவே ஒரு கிராமமாக இருந்தால் கிராமம் அமைக்கப்படும் பகுதியில் உரிய வீதிக்கான காணி, வடிகாலமைப்புக்கான காணி ,மற்றும் ஏக்கருக்கு 10 வீதம் பிரதேச சபைக்கு என ஒதுக்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பது பிரதேச சபை சட்டமாகும் ஆனால் மேற்படி அமைக்கப்பட்ட 06 வீட்டுத்திட்டங்களில் சிலவற்றில் இவ்வாறான எந்த நடை முறையும் பின்பற்றப்படவில்லை பிரதேச சபையினால் வீடு ஒன்றுக்கு தாங்கள் 1000 ரூபா மாத்திரமே அனுமதி கட்டணம் பெறுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் மாகாண கணக்காய்வு அறிகையின் பிரகாரம் வீட்டின் அனுமதி,உபபிரிகையிடுகை,இசைவுச்சான்றிதல் என அனைத்துக்கும் 3540 ரூபா பெறப்படவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

 அவ்வாறு பிரதேச சபைக்குறிய கட்டட நிர்மாணம் தொடர்பான நியமங்கள் பின்பற்றபடாமையினால் மன்னார் பிரதேச சபை மற்றும் உள்ளூராட்சி திணைக்களம் குறித்த திட்டங்களுக்கான அனுமதியும் வழங்கவில்லை இருப்பினும் இவ்வாறு உரிய அனுமதி வழங்கப்படாமலே சுமார் 786 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன இவ்வாறு அனுமதி இன்றி கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளால் மன்னார் பிரதேச சபைக்கு அனுமதி கட்டணமாகவும் அதே நேரம் இசைவுசான்றிதல் வழங்குதல் மூலமாக கிடைக்க வேண்டிய 2825000.00 ரூபா வருமானம் இதுவரை கிடைக்க பெறவில்லை அவ்வாறு செலுத்தப்படாமல் உள்ள 2825000.00 ரூபாவினை மன்னார் பிரதேச சபையானது அறவீடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாத நிலையில் இருப்பதாக 2019 ஆண்டு கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது சாதாரணமாக ஒரு வீட்டின் மதில் அமைப்தற்கே பிரதேச சபையின் அனுமதி கடிதம் அவசியப்படுகின்ற போது இவ்வளவு பெரிய கிராமங்கள் எவ்வாறு உரிய அனுமதிகள் இன்றி அமைக்கப்பட்டது என்பது தொடர்பாக சந்தேகம் நிலவி வருகின்றது குறித்த விடயம் தொடர்பாகவும் மன்னார் பிரதேச சபைக்கு குறித்த கிராமத்தின் ஊடாக வர வேண்டிய வருமானம் கிடைக்க பெறாமை தொடர்பாகவும் அக்கிராமம் அனுமதி இன்றி அமைக்கப்பட்டமை தொடர்பாகவும் மன்னார் பிரதேச செயளாலரை தொடர்பு கொண்டு கேட்ட போது பொதுவாக வீடுகள் அமைப்பதற்கான அனுமதி மற்றும் மதில்கள் கட்டுவதற்கான அனுமதி என்பன பிரதேச சபையிடமே பெறப்பட வேண்டியுள்ளது 

அதே நேரம் பிரதேச செயலகம் என்ற வகையின் அரச காணிகள் மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வீட்டுத்திடங்களுக்கே தங்களால் ஆவணங்கள் பரிசோதிக்கப்படும் என்பதுடன் தனியார் கணிகளில் வீடுகள் அமைப்பதற்கோ மதில் கட்டுவதற்கோ பிரதேச செயலகங்களில் எந்த அனுமதியும் பெறப்படவேண்டியதில்லை என்பதுடன் அவ்வாறான அனுமதியை பிரதேச செயலகங்கள் வழங்குவதும் இல்லை என தெரிவித்தார் அதே நேரம் குறித்த அனுமதி அற்ற 6 கிராமங்கள் தொடர்பாகவும் அவற்றினால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு தொடர்பாக மன்னார் பிரதேச சபை இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக தகவல்களை பெறுவதற்காக மன்னார் பிரதேச சபை தவிசாளர் இஸ்ஸதீன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மிகவும் வறிய மக்கள் என்ற அடிப்படையில் அவர்களால் அனுமதிக்கான பணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் குறித்த கிராமங்கள் சில தன்னார்வ நிறுவனங்களில் உதவியுடனேயே அமைக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அம்மக்களை அனுமதி கட்டணம் பெற வைப்பது மிகவும் கடினமாக உள்ளது என தெரிவித்தார் அதே நேரம் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை பெற்று அம்மக்களுக்கான அனுமதி பெற வைத்தல் தொடர்பான விடையங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

 அதே நேரம் இந்த 6 கிராமங்களில் சில கிராமங்களை சேர்ந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுவதால் உபபிரிவிடுகை மற்றும் தனி வீட்டு நில அளவை வரைபடம் பெறுவதில் இருந்து அவர்களுக்கு விலக்களிக்குமாறும் முன்னால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹீரால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் கடிதங்களும் காணப்படுகின்றது

 இருப்பினும் இவ்வாறான விடயங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் சட்ட விதி என்பதால் நில அளவை வரைபட அனுமதி மற்றும் உபபிரிவிடுகை அனுமதி கட்டாயம் எனவும் மக்களை அவ் அனுமதிகளை பெற்று கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஊள்ளூராட்சி திணைக்களம் 2021 ஆண்டு மன்னார் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது இருந்த போதிலும் ஒரு ஆண்டு கடந்தும் மன்னார் பிரதேசபை அவ் வருமானத்தை பெற்றுக்கொள்வதில் உரிய கவனம் செலுத்தவில்லை என்பது சபை நடவடிக்கை ஊடாக தெரிய வருகின்றது இவ்வாறான நிலையில் அப்பகுதியில் உள்ள குறித்த கிராமம் ஒழுங்கான முறையில் பதிவு செய்யப்படாமையினாலும் இசைவு சான்றிதல் பெறாமையினாலும் மன்னார் பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய 2825000.00ரூபாய்க்கு மேற்பட்ட வருமானம் கிடைக்க பெறமல் உள்ளது

 இப்படியான நிலை ஓரிரு வருடங்கள் காணப்படின் மாற்றீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் ஆனாலும் இந்த நிலமை 8 வருடங்களாக காணப்படுகின்றமை மன்னார் பிரதேச சபைக்கு மாபெரும் வருமானம் இழப்பை ஏற்படுத்தியுள்ளது இவ்வாறான உரிய அனுமதி அற்ற கட்டடங்கள்,வீடுகள் கட்டபட்டமையினால் தற்போது அதே போன்று அனுமதி அற்ற கட்டடங்கள் கடைகள் மன்னார் பிரதேச சபை எல்லைக்குள் அதிகரித்து வருவதாகவும் மன்னார் பிரதேச சபையின் 2019 ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன இந்த சமயத்தில் அனுமதியற்ற குறித்த 786 வீடுகளையும் இடித்து அழிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்ற செயற்பாடு என்பதுடன் கட்டி பூரணப்படுத்தப்பட்ட குறித்த கட்டிடங்களை உரியவாரு பதிவு செய்து அவற்றின் மூலமாக கிடைக்க பெற வேண்டிய வருமானத்தை மன்னார் பிரதேசபை பெற்று மன்னார் பிரதேச சபையின் கீழ் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை விரைவில் மேற்கொள்ள வேண்டும் 

 எனவே கட்டிடங்கள் அனுமதி இன்றி அமைக்கப்படும் போதே உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்தி உரிய அனுமதிகளை பெற்ற பின் கட்டடம் அமைப்பதற்கான வழிடத்தலை பிரதேச சபையோ நகரசபையோ வழங்க வேண்டும் என்பதுடன் அவ்வாறு அனுமதி இன்றி கட்டிய பின் அனுமதிக்காக கோரப்படும் கட்டடங்களுக்கு 1978 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்திற்கு அமைவாக அதிகளவு தாண்டப் பணம் அறவீடு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே இவ்வாறான சட்ட விரோத அல்லது அனுமதி அற்ற கட்டட நிர்மாணங்களை தடுத்தி நிறுத்த சரியான செயற்பாடு என உள்ளூராட்சி மன்றங்களுடன் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்








சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் வீடுகளால் 28 இலட்சத்தை இழந்து நிற்கும் மன்னார் பிரேதச சபை Reviewed by Author on September 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.