மன்னார் மீன்பிடியில் பாரிய வீழ்ச்சி ஏன்?
'எனது மகள் மற்றும் அவரது குடும்பம் அண்மையில் சட்டவிரோதமாக இந்திய சென்றுவிட்டனர்.இங்கு இருந்து எங்கள் தொழிலை நடத்தமுடியாது. இப்பெல்லாம் மீன் பிடிபடுவதேயில்லை. நடுக்கடலில்போய் மீன்பிடிக்கவும் எங்களுக்கு வசதி இல்லை. இந்த விலைவாசி அதிகரிப்பில் மீன்பிடியும் இல்லாமல் எம்போன்றவர்களால் வாழமுடியாது. இந்த
இடத்தை விட்டு போகவேணும் அல்லது வேற தொழில் பாக்கவேணும்' என மீன்பிடியை மேற்கொண்டு தற்போது தச்சு தொழிலில் ஈடுபட்டு வரும் ரெட்னேஸ் தெரிவிக்கின்றார்.
மன்னார் மாவட்டத்தில் இவ்வாறாறு மீன்பிடியைக் கை விட்டு வேறு தொழில்களை நாடிச்செல்லும் பல குடும்பங்கள் இருப்பதாகவும் கரைவலை தொழிலுக்கு சென்றால் கறிக்கு கூட மீன் கிடைப்பது கடினமாக உள்ளதாகவும் தாழ்வுபாடு மீனவ சங்கத்தலைவர் தெரிவிக்கின்றார்.
அண்மைக் காலமாக மன்னார் கடற்பகுதியில் மீன் பிடி மிக குறைவாக காணப்படுவதாகவும் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் மன்னார் செளத்பார் பகுதியில் நீண்ட வருடங்களாக மீன்பிடியில் ஈடுபட்டு வரும் சூசைதாசன் தெரிவிக்கின்றார்.
மன்னார் மாவட்டமானது பெரும்பாலும் மீன் பிடியை மையமாக கொண்ட ஒரு மாவட்டமாகும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் தீவகப்பகுதி முழுவதும் மீன்பிடி மற்றும் மீன்பிடியை சார்ந்த பல உப தொழில்களை வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்களே அதிகமாக காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கரையோர மீன்பிடியென்பது பலருக்கு பிரதான வாழ்வாதாரமாக உள்ளது. தற்போதுவரை மன்னார் மாவட்டத்தில் 10886 மீனவ குடும்பங்களும் 40530 மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டவர்களும் 13509 தொழிற்பாட்டில் உள்ள மீனவர்களும் மீன்பிடியை வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ளனர்.
ஆனால் இன்று மக்கள் இவ்வாறு கூறுவதற்கு என்ன காரணம்?
கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மாவட்டத்தில் மீன் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது அந்த வீழ்சியானது அசாதரண அளவில் காணப்படுகின்றமை மீன் பிடியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பாதிப்பை எடுத்துக்காட்ட கூடியதாக உள்ளது
அவ் வீழ்சியானது 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆண்டில் 21,672,430 (இரண்டு கோடியே பதினாறு லட்சத்து எழுபத்து இரண்டாயிரத்தி நானூற்று முப்பது கிலோ) குறைவாகவும் 2019 ஆம் ஆண்டை விட 2021 ஆண்டு 8,356,598 (எண்பத்து மூன்று லட்சத்து ஐம்பத்தாறாயிரத்து ஐநூற்று தொண்ணூற்று எட்டு கிலோ கிராமாகவும்) குறைந்துள்ளது
2019, 2020 ஆண்டு காலப்பகுதியில் கொரோனா பெருந்தொற்று என்ற அடிப்படையில் பல்வேறு முடக்க நிலை காணப்பட்ட போதிலும் 2019 ஆண்டு மீன்பிடி உற்பத்தி அளவு ஏனைய ஆண்டுகளை விட அதிகளவாக காணப்பட்டதுடன் 2020 ஆண்டு மீன்பிடி ஏனைய ஆண்டுகளை விட குறைவாக காணப்படுகின்றது
2019, 2020 ஆண்டு ஏற்மதி மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு சுகாதார பிரச்சினைகளை மையப்படுத்தி பல பிரச்சினைகள் காணப்பட்டமையினால் 2020 ஆண்டு மீன்பிடி தொடர்பான குறைவுக்கு கொரோனா தொற்றும் பொது முடக்கமும் ஒரளவு காரணமாக கொள்ளாம்
ஆனாலும் 2021 ஆண்டு நாடு இயல்பு நிலைக்கு வந்த போதிலும் 2020 ஆண்டு மீன்பிடி கொரோனா காரனமாக இடம் பெறாமையினால் மன்னார் கடற்கரை பகுதிகளில் மீன் வளம் அதிகரித்து காணப்பட வேண்டிய நிலையில் மீன்பிடியில் எவ்வாறான அதிகரிப்பும் காணப்படவில்லை என்பதுடன் 2021 இந்த மீன்பிடி பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளமை ஆரயப்பட வேண்டிய விடயமாக உள்ளது
இவ்வாறான பின்னனியில் மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களில் மீன் உற்பத்தி தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தினால் பெற்றப்பட்ட மீன் உற்பத்தி தொடர்பான தகவல் ஊடாக மன்னார் மாவட்டத்தில் மீன் உற்பத்தி சடுதியாக குறைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
அதன் அடிப்படையில் கடந்த 2018,2019 ஆண்டுகளை விட 2020,2021 வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் மீன் உற்பத்தியானது பல லட்சம் கிலோ அளவுக்கு குறைவடைந்துள்ளமை அதிர்சி அளித்துள்ளது
மீன்பிடியை பிரதான வாழ்வாதாரமாக கொண்ட ஒரு மாவட்டத்தில் மீன்பிடியின் வீழ்சியானது ஆயிரக்கணக்கில் குறைவடைவதென்பது சாதாரண விடயமாக கொள்ளப்பட்டாலும் பல லட்சம் கிலோ மீன் பிடி குறைவு என்பது நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்
குறிப்பாக மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்டதில் உள்ள 46 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மீன் உற்பத்தி தொடர்பான தகவலின் அடிப்படையில்
2017 ஆண்டு 20,709,411 கிலோ மீன் உற்பத்தியும்
2018 ஆண்டு 23,048,762 கிலோ மீன் உற்பத்தியும்
2019 ஆண்டு 25,335,556 கிலோ மீன் உற்பத்தியும்
2020 ஆண்டு 18,315,63 கிலோ மீன் உற்பத்தியும்
2021 ஆண்டு 16,978,958 கிலோ மீன் உற்பத்தியும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் 2017,2018,2019 ஆம் ஆண்டுகளை விட 2020,2021 ஆண்டுகளில் மீன்பிடி பாரிய அளவிற்கு குறைவடைந்துள்ளமை இத் தரவுகளின் ஊடாக தெரியவருகின்றது
இவ்வாறான மீன் உற்பத்தியின் வீழ்ச்சிக்கு கொரோனா பாதிப்பு மன்னார் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக இடம் பெற்று வருகின்ற சட்ட விரோத மீன்பிடி அதே நேரம் கொரோனா காலப்பகுதியில் காணப்பட்ட போக்குவரத்து சிக்கலும் காரணங்களாக இருந்துள்ளன. என மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கினறனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் டைனமோட் வெடி பொருளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் போது மீன்களின் வாழிடம் மற்றும் மீன்கள் உற்பத்தியாகும் பகுதிகள் முருகை கற்பாறைகள் என்பன சேதமடைவதால் அடுத்த தலைமுறைத்தோற்றத்திற்கான மீன் வளம் குன்றி போவதானால் மீன் உற்பத்தி குறைவடைகின்றது என தெரிவிக்கின்றார்
அத்துடன் கொரோனா காலப்பகுதி என்பதனால் மீன் உற்பத்தியை சந்தைபடுத்தலில் காணப்பட்ட பிரச்சினையும் போக்குவரத்து தடைகளும் இம் மீன் உற்பத்தி வீழ்ச்சிகு காரணம் என அவர் தெரிவிக்கின்றார்
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விபரங்களுடன் மீன் உற்பத்தியை ஒப்பிடுகையில் மன்னார் மாவட்டத்தில் 2018 ஆண்டு சட்ட விரோத மீன்பிடி என்ற அடிப்படையில் 37 வழக்குகளும் அதில் 9 டைனமேட் பயன்படுத்திய வழக்கும் 2019 ஆண்டு 56 வழக்குகளும் அதில் 6 டைனமெட் பயன்படுத்திய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது
அதே நேரம் 2020 ஆண்டு 111 வழக்கும் அதில் டைனமெட் வெடி பொருள் பயன்படுத்தி மீன்பிடி ஈடுபட்ட வழக்கு வெறுமனே 1 உம் ஏனையவை உரிய அனுமதி இல்லாமை,இரவு நேரங்களில் அனுமதி அற்ற தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டமை,ஆமை பிடித்தமை போன்றவைகளே அதே போன்று 2021 ஆண்டு 116 வழக்குகளும் அதில் டைனமொட் வெடி பொருள் பயன்படுத்தியதாக எந்த வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான பின்னனியில் பாரிய அளவிலான சட்ட விரோத மீன்பிடி சம்பவங்கள் மன்னாரில் பதிவு செய்யப்படாமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 83 லட்சம் கிலோ மீன் உற்பத்தி வீழ்சிக்கு சட்டவிரோத மீன் பிடியின் தாக்கம் மிக பிரதான பங்களிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்பதுடன் சட்டவிரோத நடவடிகையின் ஊடாக மீன் பிடி இடம் பெறுமாயின் ஆண்டின் மீன் உற்பத்தி அதிகரித்தே காணப்படும்
அதே நேரம் 2017,18,19 ஆண்டுகளிலும் மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம் பெற்ற போதிலும் அவ் ஆண்டுகளில் மீன் பிடி அதிகரித்தும் 2020,2021 ஆண்டுகளில் குறைந்து காணப்படுகின்றமை ஒப்பீட்டு அளவில் சட்டவிரோத மீன் பிடியினால் தான் மீன் வளம் குறைந்துள்ளது என்பதை ஏற்புடையதாக்கவில்லை
இதே நேரம் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை மற்றும் அவர்களின் சட்ட விரோதமான இழுவைமடி வலை பாவனையினால் அதிகளவு மீன்வளம் குன்றி போவதாக வடமாகாண மீனவ சமாச ஊடக பேச்சாளரும் மன்னார் மீனவ சங்க உபதலைவருமான ஆலம் தெரிவிக்கின்றார்
இந்திய மீனவர்களின் வருகையின் அடிப்படையில் மீன் உற்பத்தியை ஒப்பீட்டு பார்க்கும் பொழுது இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை மன்னார் மாவட்டத்தில் 2018 ஆண்டு 1 மீன்பிடி படகும் 2019 ஆண்டு 2 படகும் கைப்பற்றப்பட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்
அதே போல் 2020 ஆண்டு 1 படகும் 2021 ஆண்டு 2 படகுகளுமே கைது செய்யப்பட்டுள்ளது எனவே சடுதியான இந்த மீன் உற்பத்தி குறைவுக்கும் இந்திய மீனவர்களின் வருகைக்குமான சம்மந்தம் என்பது குறைவாகவே காணப்படுகின்றது
அதே நேரம் இந்திய மீனவர்களின் வருகை என்பது யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதியில் உச்ச நிலையில் காணப்பட்டது அதே நேரம் 2017, 2018,2019 ஆண்டு காலப்பகுதியிலும் இந்திய மீனவர்களின் வருகை காணப்பட்ட போதிலும் அவர்களின் சட்ட விரோத இழுவை மடி மீன்பிடி முறை பயன்படுத்தப்பட்ட போதிலும் மீன் உற்பத்தியின் வீழ்ச்சி என்பது காணப்படவில்லை என்பதுடன் ஆண்டு தோறும் (100000-300000) ஒருலட்சம் தொடக்கம் மூன்றுலட்சம் கிலோகிராம் வரையான உற்பத்தி அதிகரிப்பே காணப்படுகின்றது
ஆனாலும் 2020,2021 ஆண்டு காலப்பகுதில் இவ் உற்பத்தி தொகையானது சடுதியாக 83 லட்சம் கிலோ வரை குறைந்து காணப்படுகின்றமை கரிசனையில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்
இவ்வாறான பாரிய அளவு உற்பத்தி குறைவுக்கு மன்னார் மாவட்டத்தில் 2019 பின்னர் ஆரம்பிக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டமும் கரையோரப்பகுதிகளில் அமைக்கப்பட்ட காற்றாலைகளும் காரணமாக இருக்கலாம் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட்ட பொது அமைப்புக்கள் தொடர்சியாக சந்தேகம் எழுப்பியுள்ளதுடன் காற்றாலை செயற்திட்டத்தின் விரிவுபடுத்தலுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்
இவ்வாறான பின்னனியில் காற்றாலை கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 2017- 2021 வரையான காலப்பகுதியில் அந்த இடங்களில் மீன் உற்பத்தியின் நிலை எவ்வாறு உள்ளது என்பதுடன் அங்கு இடம் பெற்ற மீன் உற்பத்தியை விசேடமாக ஆராய்ந்தோமேயானால் அப்பகுதிகளில் ஏனைய பகுதிகளை விட அதிகளவான மீன் உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுகின்றது
அதன் அடிப்படையில்
கிராமம் | 2018 | 2019 | 2020 | 2021 |
நடுக்குடா | 357122 | 351065 | 234848 | 96270 |
முருகன் கோவில் | 319017 | 343229 | 243876 | 119378 |
பேசாலை | 2792846 | 2830213 | 1635264 | 597576 |
காட்டாஸ்பத்திரி | 265097 | 307625 | 282008 | 262244 |
சிறுதோப்பு | 550707 | 604063 | 320716 | 168072 |
பெரிய கரிசல் | 720010 | 791548 | 373625 | 178154 |
சின்ன கரிசல் | 472200 | 554748 | 345508 | 103037 |
புதுகுடியிருப்பு | 608676 | 678379 | 505631 | 433387 |
எருக்கலம்பிட்டி | 714716 | 811016 | 541758 | 245643 |
போன்ற பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்திக்கு முன்னர் காணப்பட்ட மீன் பிடி அதிகரிப்பும் அதே நேரம் அதே பகுதிகளில் காற்றாலை அமைக்கப்பட்ட பின்னர் காணப்படுகின்ற மீன் உற்பத்தி குறைவும் தெளிவாக தெரிய வருகின்றது
இந்த நிலையில் காற்றாலை செயற்திட்டம் மீன் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாதா மீன்பிடி கற்கையோடு தொடர்புபட்ட பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது கரையோரங்களில் மேற்கொள்ளப்படும் காற்றாலை செயற்திட்டத்தின் ஊடாக மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என்பது தொடர்பான எந்த ஒரு விஞ்ஞான ஆய்வுகளும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை செயற்திட்டத்தினால் புவியியல் ரீதியாகவும் வானிலை ரீதியாகவும் பல தரப்பட்ட பாதிப்புக்களை மன்னார் மாவட்டம் எதிர்கொண்டு வருவதாக யாழ்பல்கலைகழக புவியியல் சிரேஸ்ர விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜ உறுதிப்படுத்துகின்றார்
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மழை நாட்களின் எண்ணிக்கை குறைவடந்துள்ளதாகவும் ஆனால் மழை வீழ்ச்சியின் அளவு அதிகரித்து வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார் மேலும் காற்றாலை அமைக்கப்பட்ட பகுதிக்கு அருகில் ஆவி உயிர்ப்பு ஆவியாக்க செயற்பாடு அதிகம் காணப்படுவதாலும் காடுகள் அழிக்கப்படுவதனால் மன்னாரில் வறட்சி அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்
அத்துடன்
கடலை அண்மித்த பகுதியில் இடம் பெறும் புதிய கட்டட நிர்மாணங்கள் மற்றும் புதிய மாற்றங்களுக்கு கடல்வாழ் உயிரினங்கள் உடனடியாக ஈடுகொடுப்பதில்லை எனவும் கடல்வாழ்சூழலில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என P.லக்ஷயன்
B.Sc (hons) in Marine and Freshwater sciences(undergraduate) தெரிவிக்கின்றார்
அவர் மேலும் தெரிவிக்கையில் கடற்பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணங்களின் போது உருவாகும் சத்தம், கட்டட நிர்மாணங்களின் போது பயன்படுத்தும் அமிலங்கள் காற்றின் ஊடாக பரவி கடலில் சேரும் போது கடல் பகுதியில் உள்ள சூழல் தொகுதி நிச்சயம் பாதிப்படையும் என அவர் தெரிவிக்கின்றார்
அதே நேரம் காலநிலை மாற்றம் மனிதர்கள் வாழும் சூழலை மாத்திரம் அல்லாமல் கடல் சூழலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் கடல்சூழல் சார்ந்த பகுதியில் காலநிலையில் தொடர்சியாக மாற்றம் ஏற்படும் போது அவையும் கடல் சூழல், கடல் தாவரங்கள், மற்றும் மீன் இனப்பெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவிக்கின்றார்
மேலும் கடல் சூழலை அண்டிய பகுதிகளில் ஏற்படும் சத்தம்,இரவு நேரங்களில் ஏற்படும் வெளிச்சம் என்பன நள்ளிரவில் உணவு தேடும் மீன்களின் வருகையையும் குறைக்கும் வாய்புக்கள் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்
மேலும் இலங்கையில் பாதுகாக்கப்படும் ஆமை இனங்கள் காற்றாலைகளில் பாதுகாப்புக்கு பொருத்தப்பட்டிருக்கும் சிவப்பு நிற எச்சரிக்கை விளக்கின் வெளிச்சத்துக்கு ஈர்க்கப்பட்டு கரைகளை நோக்கி வருகை தரலாம் எனவும் வழமையான ஆமைகளின் இனப்பெருக்க நடவடிக்கைகள் இதனால் பாதிக்கப்படுவதுடன் ஆமைகளின் பாதுகாப்பான இனப்பெருக்க இடங்களை தவிர்து வெளிச்சம் காணப்படும் இடங்களை நோக்கி நகரும் சம்பவங்களும் இடம் பெறலாம் என தெரிவிக்கின்றார்
இவ்வாறான சம்பவங்கள் தொடர்சியாக இடம் பெறும் பட்சத்தில் மீன்கள் வேறு இடங்களை நோக்கி நகர கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதுடன் கடல் தாவரங்களின் வளர்சியும் குறைவடையும் என அவர் சுட்டிகாட்டியுள்ளார்
மேலும் கடந்த மாதம் தலைமன்னார் கடற்பகுதியில் 10-15 க்கு மேற்பட்ட ஆமைகளின் இறந்த உடல் பாகங்கள் வனயீவராசிகள் திணைக்களத்தினால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்க அம்சம் ஆகும்
அதே நேரம் அண்மையில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் கரையோரங்களில் மிதக்கும் காற்றாலை செயற்திட்டங்களை அமைப்பதை எதிர்த்து பொது மக்களால் போராட்டங்கால் முன்னெடுக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இவ்வாறான பின்னனியில் மன்னார் மாவட்டத்தில் அதானி கிரீன் எனர்ஜி லிமிட்டெட் நிறுவனத்துடன் இணைந்து மன்னார் தொடக்கம் பூநகரி அதே நேரம் முள்ளிக்குளம் வரையான பகுதிவரையான
இடங்களில் மின்காற்றாடிகள் அமைக்கும் பணிக்கான தற்காலிக அனுமதி வலுசக்தி அமைச்சு வழங்கியுள்ளதாக மின்வலு சக்திஅமைச்சர் கஞ்சனவிஜசேகர தனது டிவிட்டர் பக்கதில் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி தெரிவித்திருந்தார் அதன்படி 500 மில்லியன் அமேரிக்க டொலர் முதலீட்டில் 520 மெஹாவோட் மின் உற்பத்திகளை மேற்கொள்ளும் 90 மின்காற்றாலைகளை அமைப்பதற்கான விரிவுபடுத்தல் திட்டமும் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இவ்வாறான மீன் உற்பத்தி குறைபாடுகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் காணப்படுகின்ற போதிலும் அதிகளவான காற்றாலைகள் மன்னார் தீவக பகுதிக்குள் அமைக்கப்பட்டல் தற்போது இருக்கும் மீன்வளம் முற்றும் முழுதாக அழிவடைந்துவிடும் எனவும் தீவகப்பகுதிக்குள்ளோ அல்லது கடற்கரையோரங்களிலோ மீன்பிடி நடவடிக்கை நடைபெறும் பகுதிகளிலோ காற்றாலை செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரஜைகள் குழு மற்றும் மீனவ அமைப்புக்கள் கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்
இருப்பினும் இந்த செயற்திட்டத்தின் மேலதிக முன்னெடுப்புக்கள் அரசாங்கத்தினால் மோற்கொள்ளப்பட்டே வருகின்றன
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தரிசாக கிடக்கும் மக்கள் பயன்படுத்தாத எத்தனையோ தரிசு நிலங்கள் எத்தினையோ ஆயிரம் ஏக்கர் காணப்படுவதாகவும் அவற்றில் காற்றாலை விரிவுபடுத்தலை மேற்கோளுமாறும் கடல்கரைகளிலும் மீன்பிடி நடவடிக்கைகள் இடம் பெறும் இடங்களிலும் காற்றாலைகள் வேண்டாம் வடமாகாண மீனவ இணையத்தின் ஊடகபேச்சாளர் ஆலம் தெரிவிக்கின்றார்
மன்னார் மீன்பிடியில் பாரிய வீழ்ச்சி ஏன்?
Reviewed by Author
on
November 05, 2022
Rating:

No comments:
Post a Comment