இனியும் பணம் வழங்க முடியாது
அரச வணிகங்களை நடத்துவதற்கு திறைசேரியால் இனி பணத்தை வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பிரதேசத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச வர்த்தகங்களை மறுசீரமைப்பது தொடர்பான விடயங்களை நிதி அமைச்சின் விசேட குழு ஆராய்ந்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், "அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதை நாங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளோம். அதன்படி, அமைச்சரவை மறுசீரமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக நிதி அமைச்சகத்தின் கீழ் தனி பிரிவு நிறுவப்பட்டுள்ளது. அந்த பிரிவின் அதிகாரிகள் தற்போது மற்ற அரசு நிறுவனங்களுடன் மிகவும் பொருத்தமான மறுசீரமைப்பு முறை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்."
"எனவே நாம் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் அரச வணிகங்களை நடத்துவதற்கு திறைசேரியில் இருந்து பணத்தை வழங்க முடியாது. இரண்டாவது விடயம், எதிர்காலத்தில் எழும் சவாலான பொருளாதார நிலைமைகளைத் தாங்கும் வகையில் அரச வணிகங்கள் மாற வேண்டும். அதன்படி, பல வழிகளில் அரச வணிகங்களை மறுசீரமைக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்.
அந்த அனைத்து மறுசீரமைப்புகள் குறித்தும் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்படும்” என்றார்
Reviewed by Author
on
July 22, 2023
Rating:


No comments:
Post a Comment