ஜனாதிபதியின் பிரதிநிதியின் தீர்மானத்திற்கு பௌத்த பிக்குகள் எதிர்ப்பு
திருகோணமலையில் விகாரை ஒன்றின் அபிவிருத்திப் பணிகளை பொதுமக்களின் எதிர்ப்பினால் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்த கிழக்கு மாகாண ஜனாதிபதியின் பிரதிநிதிக்கு எதிராக பௌத்த பிக்குகள் குழுவொன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
திருகோணமலை கோகன்னபுரவை பாதுகாக்கும் அமைப்பு உள்ளிட்ட பிரதேச மக்கள் இணைந்து திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (28) காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததாக பிராந்திய ஊடகவியளலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"செந்தில் தொண்டமானினால் நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள, பௌத்த அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். திருகோணமலை பௌத்த விவகாரங்கள் தொடர்பில் ஏன் நாடாளுமன்ற விவாதங்கள் நடைபெறவில்லை?" போன்ற கோசங்களை எழுப்பியவாறு, திருகோணமலை பொரலுகந்த ரஜமகா விகாரையின் அபிவிருத்தியை நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிகின்றனர்.
திருகோணமலை, இலுப்பைக்குளம் பெரியகுளத்தில் அமைந்துள்ள பொரலுகந்த ரஜமகா விகாரையின் விகாராதிபதிக்கு கடந்த 9ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பிய பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன், விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்கு காணியில் சுற்றுவட்டார மக்களின் கடும் எதிர்ப்பு காணப்படுவதால், குறித்த பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் தொலைபேசி அழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்மொழி அறிவுறுத்தலின் பிரகாரம், துப்புரவு மற்றும் நிர்மாண நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பொரலுகந்த ரஜமகா விகாரையின் அபிவிருத்தியை நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநரின் “சட்டவிரோத உத்தரவை” அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, ஓகஸ்ட் 24 ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
“விகாரைகள், பௌத்த தேரர்கள் மீது கைவைப்பவர்களின் தலைகளை களனிக்குக் கொண்டு வருவேன்” என, விகாரையின் அபிவிருத்திப் பணிகள் நிறுத்தப்பட்டமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஆவேசத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
“இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு நான் வடக்கு கிழக்கிற்கு வருவேன். நீ விகாரைகள் மீது கைவைத்தால், தேரர்களைத் தொட்டால், நான் மீண்டும் களனிக்குத் சும்மா திரும்பி வரமாட்டேன். உன் தலையை என் கையில் ஏந்திக்கொண்டுதான் களனிக்கு வருவேன். இதை நான் மாற்ற மாட்டேன்."
முன்னாள் அமைச்சரினால் பகிரங்கமாக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலுக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதியின் பிரதிநிதியின் தீர்மானத்திற்கு பௌத்த பிக்குகள் எதிர்ப்பு
Reviewed by Author
on
August 29, 2023
Rating:

No comments:
Post a Comment